விளையாட்டுத் தனமாக பேசினேன்: ஓசி சர்ச்சைக்கு பொன்முடி பதில்!

அரசியல்

”ஓசி பஸ் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியதற்கு சர்ச்சை எழுந்த நிலையில், இன்று (செப்டம்பர் 30) அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கலைஞர் நகர் தெற்குப் பகுதி திமுக சார்பில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி முப்பெரும் விழா விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி “இப்போது பெண்கள் எல்லாம் எப்படி பயணம் செய்கிறீர்கள். கோயம்பேடு போகவேண்டும் என்றால் ஓசி பேருந்தில்தான் செல்கிறீர்கள்” எனப் பேசியிருந்தார்.

சர்ச்சையை உண்டாக்கிய அமைச்சர் பொன்முடியின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், , நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எனப் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பொறியியல் வகுப்புகள் தொடர்பாக இன்று (செப்டம்பர் 30) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம்.

கல்லூரிகளில் மீதமுள்ள காலி இடங்களில், இவர்கள் சேர்ந்து படிக்கலாம். அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதுகுறித்து விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.

மாநில கல்விக் கொள்கை குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்ய ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவு தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பொறியியல் கலந்தாய்வு மற்றும் வகுப்புகள் தொடங்கத் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தோம்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது.

பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்படும். 8ஆம் தேதி முதல் அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

4 கட்டக் கலந்தாய்வுகள் நிறைவு பெற்றதும் அக்டோபர் மாத இறுதியில், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்” என்றவரிடம் ”ஓசி பஸ் சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், “நான் விளையாட்டுத்தனமாக சும்மா பேசியதை பெரிதாக்குகிறார்கள், வேறு எந்த எண்ணத்திலும் பேசவில்லை. அதை பெரிதுபடுத்த தேவையில்லை” என்றார்.

ஜெ.பிரகாஷ்

பொறுப்பில் இருக்கும்போதே தேர்தலுக்கு அவசரம் ஏன்?: எடப்பாடிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தல் : திமுக அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

1 thought on “விளையாட்டுத் தனமாக பேசினேன்: ஓசி சர்ச்சைக்கு பொன்முடி பதில்!

  1. சர்ச்சை பேச்சு பேசுபவர்களை கவனிக்க ஒரு குழு தமிழக அரசு அமைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.