மகளிர்க்கான இலவச பேருந்து பயணத்தை ஓசி என குறிப்பிட்டதற்காக அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும் உயர் கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி அண்மையில் தமிழக அரசின் பெண்களுக்கான இலவச பேருந்துக்கான திட்டத்தை, ‘ஓசி பேருந்து’ என்ற வார்த்தை மூலமாக குறிப்பிட்டார்.
இந்த வீடியோ மக்களிடம் வேகமாக பரவி அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் குவிந்தன. முதல்வர் மீதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனத்தை தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘திமுகவினர் அரசின் திட்டங்களைப் பற்றி மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். வெட்டி ஒட்டி திமுக அரசைப் பற்றி தவறான அபிப்ராயத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முயல்பவர்களுக்கு நாம் வாய்ப்பளிக்கக் கூடாது. வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கொடுத்துவிடக் கூடாது” என்று திமுக நிர்வாகிகளை எச்சரித்தார்.
அக்டோபர் 9 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஸ்டாலின் மீண்டும் அமைச்சர்களையும் நிர்வாகிகளையும் எச்சரித்தார். “ஒவ்வொரு நாளும் இன்று நம்மவர்களால் என்ன பிரச்சினை வருமோ என்றுதான் கண் விழிக்கிறேன். என்னை மூத்த அமைச்சர்களே துன்பப்படுத்தினால் நான் என்ன செய்வது? ” என்றும் உருக்கமாக பேசியிருந்தார். அப்போது ஓசி சர்ச்சைக்கு உரிய அமைச்சர் பொன்முடி சிரித்துக் கொண்டிருந்தார். இது அவர் மீதான விமர்சனங்களை அதிகப்படுத்தியது. திமுகவினரே கூட, “தலைவர் எவ்வளவு ஃபீல் பண்ணி பேசுறார். இவர் சிரிக்கிறத பாரேன்” என்று கோபப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 12) சென்னையில் பெரியார் திடலில் திமுக தலைவராக இரண்டாம் முறையாக தலைவராகியிருக்கும் ஸ்டாலின் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது
இந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, “நான் சொன்ன ஒரு வார்த்தையை வைத்து பெரிய அளவில் அரசியல் ஆக்கிவிட்டார்கள். பொதுவாக கிராமங்களில் சொல்லும் வார்த்தையை வைத்துதான் நான் சொன்னேன். ஆனால் நம் தலைவர், முதல்வர் ஆட்சியில் வேறு எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள், இந்த ஒரு வார்த்தையை பெரிய அளவில் கொண்டு சென்று அரசியல் செய்துவிட்டார்கள். உண்மையிலேயே அந்த வார்த்தையால் யாருடைய மனதேனும் புண்பட்டிருந்தால் நான் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
–வேந்தன்
அக்டோபர் 28 முதல் பால் நிறுத்தப் போராட்டம்!
வெங்கட் பிரபுவின் டாஸ்மாக் கடை: அடித்து நொறுக்கிய மக்கள்!