காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானம் முதலமைச்சரின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டதா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான காலை உணவு திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
இதன்மூலம் ஏராளமான குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் காலை உணவுத் திட்டத்தை ஓராண்டு காலம் தனியாரிடம் ஒப்படைக்க இன்று (நவம்பர் 29) நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு தற்போது எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சுமார் 350 பள்ளிகளில் நாள்தோறும் 65ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானம் தமிழக முதலமைச்சரின் ஒப்புதலோடு தான் நிறைவேற்றப்பட்டதா ?
ஒருவேளை முதலமைச்சரும் இத்தீர்மானத்திற்கு அனுமதி அளித்திருந்தால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் போக்குவரத்துத் துறை தொடங்கி அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதாக பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை தானோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
எனவே, காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானத்தை திரும்ப பெறுவதோடு, ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கிய அட்சயப்பாத்திரமான அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான உணவு தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தனியாருக்கு செல்லும் காலை சிற்றுண்டி உணவு திட்டம்?: அன்புமணி கண்டனம்!
வடதமிழகத்திற்கும் சென்னைக்கும் முக்கியமான நாட்கள்: வெதர்மேன் அப்டேட்