செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி புகார்: வழக்கறிஞர்கள் பரஸ்பரம் குற்றச்சாட்டு!

Published On:

| By Kalai

Fraud complaint against Senthil Balaji

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி புகார் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர்.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில்  நீதிபதி கிருஷ்ண முராரி தலைமையிலான அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.

வழக்கு இன்று(பிப்ரவரி 17) விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, விசாரணையை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு பட்டியலாகவில்லை. பதிவாளரை அழைத்து பேச வேண்டும்.

அமலாக்கத்துறை வழக்குகளும் நிலுவையில் உள்ளது, அவையும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.  இதனால் தேவையில்லாமல் வழக்கு விசாரணை தாமதமாகிறது. கூடுதல் கால அவகாசமும் வழங்கக் கூடாது  என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். 

அப்போது குறுக்கிட்ட மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், அமலாக்கத்துறை 3 வழக்குகள் இன்னும் பிழைகள் சரிசெய்ய படாமல் நிலுவையில் உள்ளதாக சுட்டிக் காட்டினார்.

அப்போது, விசாரணைப் பட்டியல் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த, நீதிபதி கிருஷ்ணா முராரி, உச்சநீதிமன்ற வழக்குகள் பட்டியலில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் ஒரு சில சமயங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்க இயலாது என விளக்கினார். 

தொடர்ந்து அமலாக்கத்துறை கோரிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் , தொடர்ந்து ஏன் கால அவகாசம் கோரி விசாரணையை தாமதப்படுத்த முயல்கிறார்கள் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம்   கேள்வி எழுப்பினார்.

பின்னர் இந்த விவகாரத்தில், தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்குகளை நீதிபதி ஒத்திவைத்தார்.

கலை.ரா

தமன்னாவுக்கு விருந்தளித்து அசத்திய பிரபாஸ்

துப்பாக்கிச் சூட்டில் தமிழர் பலி : தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share