மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் இன்று (பிப்ரவரி 9) அரசு முறைப் பயணமாக இலங்கை புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் இலங்கையில் இருப்பார். முருகனுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இலங்கை சென்றிருக்கிறார்.
டாக்டர் எல். முருகன் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை திறந்து வைக்க உள்ளார். இந்திய அரசின் நிதி உதவி மூலம் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாச்சார மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 மார்ச்சில் அடிக்கல் நாட்டினார்.
இந்த மையம் இந்தியா இலங்கை இடையேயான மேம்பட்ட நல்லுறவிற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில், அருங்காட்சியகம், 600 பேர் வரை அமரக்கூடிய நவீன திரையரங்கு வசதியுடன் கூடிய அரங்கம் 11 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத் திறந்து வைக்கும் அமைச்சர் எல்.முருகன், தொடர்ந்து இந்தியாவின் பங்களிப்புடன் மக்கள் நலன் தொடர்பாக இலங்கையில் தொடங்கப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார், மேலும் பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார் என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டபோது இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் கொழும்பு சென்று கலந்துகொண்டார்.
கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றபோது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்தித்து 13 ஆவது சட்டத் திருத்தம் உள்ளிட்ட தமிழர்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.
பிரதமர் மோடி தனது முதல் ஆட்சிக் காலத்தில் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் செய்தார்.
அப்போது யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையத்துக்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இந்த கலாச்சார மையம் 2020 ஆம் ஆண்டே திறப்பு விழாவுக்குத் தயாராக இருந்தபோதும், இப்போது இரண்டாவது முறையாக திறக்கப்படுகிறது.
“2022 மார்ச் 28 ஆம் தேதி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் இலங்கை பயணம் மேற்கொண்டபோது, கொழும்புவில் இருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இல்லமான டெம்பிள் ட்ரீயில் இருந்தபடி இதே யாழ்ப்பாண கலாச்சார மையத்தை வெர்ச்சுவல் முறையில் திறந்து வைத்தார்.
இந்தத் திறப்பு விழாவுக்குப் பின்னர் யாழ்ப்பாண கலாசார மையத்தில் நடந்த பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளையும் கொழும்பில் இருந்தே ரசித்தனர் ராஜபக்சேவும், ஜெய்சங்கரும். இந்தத் தகவலை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அதிகார பூர்வ செய்தியாகவே வெளியிட்டுள்ளது.
இப்படி இலங்கை பிரதமர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் ஆகியோர் சேர்ந்து காணொளி மூலமாக திறந்து வைத்த யாழ்ப்பாண கலாச்சார மையத்தை மீண்டும் நேரடியாக சென்று திறக்க இருக்கிறார் முருகன்.
ஏற்கனவே இந்த கலாசார மையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை இலங்கை அரசு எடுத்துக் கொள்ள முயன்ற நிலையில், அதற்கு யாழ்ப்பாணம் மாநகராட்சியும் தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதேநேரம் இந்த பதினோரு மாடி கலாசார மையத்தை பராமரித்து நிர்வகிக்கும் அளவுக்கு யாழ்ப்பாண மாநகராட்சியிடம் நிதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கலாசார மையத்தின் நிர்வாக செலவுகளை முதல் ஐந்து வருடத்துக்கு இந்தியாவே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தது. ஆனாலும் யாழ்ப்பாண கலாச்சார மையம் திறக்கப்பட்டு முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதுகுறித்து கடந்த அக்டோபர் மாதம் தி வயர் ஊடகத்திடம் பேசிய யாழ்ப்பாணம் மேயர் மணிவண்ணன், “யாழ்ப்பாணம் மாநகராட்சி சார்பாக இந்த கலாசார மையத்தை நடத்த விருப்பம் தெரிவித்தோம்.
இது குறித்து இந்தியாவிடமும் பேசினோம். ஆனால் கொழும்பு இதற்கு உடன் படவில்லை. ஆனால் எங்களால் இந்த கலாசார மையத்தை நடத்த முடியும்” என்று தெரிவித்திருந்தார்.
வடக்கு மாகாண கவுன்சிலின் முன்னாள் ஆணையர் சி.வி.கே. சிவஞானம் தி வயர் ஊடகத்திடம் பேசியபோது, “:இந்தியாவால் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையம் ஏன் இன்னும் திறக்கப்படவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் முருகன் யாழ்ப்பாண கலாசார மையத்தைத் திறந்து வைக்க இன்று (பிப்ரவரி 9) இலங்கை செல்கிறார். அமைச்சர் முருகனோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த விழாவில் கலந்துகொள்கிறார். சில மாதங்களுக்கு முன் அண்ணாமலை இலங்கைக்கு ஒரு வார பயணம் மேற்கொண்டது குறிப்பிடத் தக்கது.
இந்திய அரசு பெரும் முதலீட்டில் கட்டியுள்ள யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் நிர்வாகப் பொறுப்பை யாழ்ப்பாண மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே யாழ் தமிழர்களின் விருப்பமாக உள்ளது.
மாறாக கலாச்சார மையத்தின் சாவி கொழும்புவிடம் இருந்தால், இந்த மையத்தின் முழுமையான பயன்பாடு தமிழர்களுக்கு சேராது என்பதே அவர்களின் கருத்தாகவும் உள்ளது.
பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய யாழ்ப்பாண கலாச்சார மையம் கட்டி முடிக்கப்பட்டு, இரு வருடங்களுக்குப் பிறகு தமிழர்களுக்கு முழுமையாக ஒப்படைக்கப்பட இருக்கிறது.
–ஆரா
ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்க கட்டிகள்: சிக்கியது எப்படி?
‘எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆட்சியைக் கலைத்தது காங்கிரஸ்’: நாடாளுமன்றத்தில் மோடி