அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி மைத்ரேயன் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 9 ) அறிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.பியான மைத்ரேயன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த போது தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அணியில் இருந்தார்.
பின்னர், அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர ஏதுவாக இரு தரப்பினர் பேச்சுவார்த்தையில் மைத்ரேயனும் கலந்து கொண்டார்.
இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் அணிகள் மாறினாலும் முகங்கள் மாறவில்லை என ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்த போது கூட ஓபிஎஸ்ஸுடனே பயணித்தார்.
ஓபிஎஸ் அணியினருடன் எல்லா ஆலோசனைகளிலும் கலந்து கொண்ட மைத்ரேயன் ஜூன் 23 பரபரப்பான பொதுக்குழுவுக்கு முதல்நாள் திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது அவர், எடப்பாடியின் கால்களில் விழுந்ததாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், நேற்று ( அக்டோபர் 9 ) சென்னை எழும்பூரில் தனியார் மண்டபத்தில் நடந்த மாற்றுக் கட்சியினர் ஓபிஎஸ் அணியில் இணையும் விழாவில் கலந்து கொண்ட மைத்ரேயன் ஓபிஎஸ் அணியில் தன்னை இணைத்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் “எடப்பாடி அணியில் இணைந்து 108 நாட்களில் இப்போது மீண்டும் ஓபிஎஸ் அணிக்குத் திரும்பி உள்ளேன்…
சமீபத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது எதிர்த் தரப்பில் இருக்கிறேன் என்று கூட யோசிக்காமல் அழைத்து நலம் விசாரித்தவர் தான் ஓபிஎஸ்.
அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தும் திறமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும் தான் உள்ளது அதனால் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு திரும்பியுள்ளேன்” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 9 ) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்;
கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்;
கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
முன்னாள் எம்.பி., மைத்ரேயன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சியின் உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது, “மைத்ரேயன் பாஜகவில் இருந்து ஜெயலலிதா காலத்திலேயே அதிமுகவுக்கு வந்தவர்.
அதேநேரம் டெல்லி பாஜக தலைவர்களுடன் நல்ல நட்பில் தொடர்பவர். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து திரும்பினார்.
அப்போது அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் ஒன்றிணைய வேண்டும் என அமித்ஷா எடப்பாடியிடம் அழுத்தமாக குறிப்பிட்டார்.
இதேநேரம் எடப்பாடியுடன் இருந்த கடந்த சில மாதங்களில் மைத்ரேயன் சில கசப்பான அனுபவங்களை சந்தித்தார்.
இந்த பின்னணியில் டெல்லி சிக்னலை உணர்ந்துதான் எடப்பாடி அணியில் இருந்து மீண்டும் பன்னீர் அணிக்கே வந்துவிட்டார் மைத்ரேயன்” என்கின்றார்கள்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
‘கட்டளையிடுங்கள்… 2024 தேர்தலிலும் வெற்றி உறுதி’ : உதயநிதி
ஸ்டாலினை பார்த்து கலைஞரும் பேராசிரியரும் சொன்னது இதுதான் : எ.வ.வேலு