ஹரியானாவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக மூத்த தலைவர் அசோக் தன்வார் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
வரும் அக்டோபர் 5ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம், கட்சித் தாவல் என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக்கொண்டிருக்கிறது தேர்தல் களம்.
ஹரியானா மாநிலத்தில் தலித் தலைவராக அறியப்படும் அசோக் தன்வார் 2014- 2019ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் எம்.பியாக இருந்தார். 2019ஆம் ஆண்டு ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி 2022ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். 2024 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பதா என எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவில் சேர்ந்தார்.
2024 எம்.பி.தேர்தலில் சிரா தொகுதியில் போட்டியிட்ட அசோக் தன்வார் காங்கிரஸ் வேட்பாளர் குமரி செல்ஜாவிடம் தோல்வியுற்றார்.
இந்த நிலையில் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்து வந்தார். இன்று (அக்டோபர் 3) கூட நல்வா தொகுதியில் போட்டியிடும் ரந்தீர் பனிஹரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது முதல்வர் நயாப் சைனி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.
பாஜகவுக்கு பிரச்சாரம் செய்த புகைப்படத்தையும் மதியம் 1.45 மணிக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
திடீர் ட்விஸ்ட்டாக இந்த பதிவை வெளியிட்ட ஒரு மணி நேரத்துக்குள் மகேந்திரஹர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார் அசோக் தன்வார். இது, பிரச்சாரத்தில் பங்கேற்றவர்களை ஆச்சர்யமடைய வைத்தது.
இந்த புகைப்படத்தை 2.52 மணிக்கு காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஆக ஒரே மணி நேர கேப்பில் பாஜகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவியுள்ளார் அசோக் தன்வார்.
இவர் கடந்த சில நாட்களாகவே பாஜக மீது அதிருப்தியில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
கடைசி கட்ட பிரச்சாரம் இன்று பரபரப்பாக நடந்த நிலையில் காங்கிரஸில் இணைந்து அசோக் தன்வார் ஹரியானா தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பல்வாலில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலித்களுக்கு எதிரான கட்சி என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் தலித் தலைவரான அசோக் தன்வார் காங்கிரஸில் இணைந்திருப்பது ஹரியானா தேர்தலில் காங்கிரஸுக்கு பலமாகவும், பாஜகவுக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
காலநிலை மாற்றம், பெண்ணுரிமை : ஐநாவில் சவுமியா அன்புமணி பேச்சு!
14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்!