பாமக தலைவர் டாக்டர் அன்புமணி கடந்த சில மாதங்களாக வட மாவட்டங்கள் முழுவதும் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி பாமகவினரின் தற்போதைய பிரச்சனைகளையும் செவிமடுத்து வருகிறார் அன்புமணி.
இந்தப் பயணத்துக்கு இடையே தான் செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். அதற்கு ஏதுவான கூட்டணியை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம்” என்று கூறியிருந்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டது பாமக. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு தமிழ்நாடு சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு தேர்தலை எதிர்கொண்ட நிலையிலும் பாட்டாளி மக்கள் கட்சி 23 இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி பொறுப்பேற்ற பின் பாமகவை வலிமைப்படுத்துவதற்கு சில வியூகங்களை தீட்டி வருகிறார்.
இந்த வகையில் ஏற்கனவே பாமகவில் இருந்து பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்ற முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு மீண்டும் பாமகவில் சேர வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வட மாவட்டங்களில் இருந்து பல பாமக பிரமுகர்களை பாஜகவினர் தங்கள் கட்சிக்கு பதவி தருவதாக அழைத்துச் சென்றனர். அவர்களில் திருத்தணி முன்னாள் பாமக எம்எல்ஏவான ரவி ராஜும் ஒருவர்.
சில தினங்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்திலிருந்து ரவிராஜுக்கும் அழைப்பு சென்று இருக்கிறது. ஏற்கனவே பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கும் ரவிராஜ் சில மாதங்களாகவே தீவிர செயல்பாடு இல்லாமல் ஒதுங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களோடு நாளை டிசம்பர் 7ஆம் தேதி மீண்டும் பாமகவில் சேருகிறார் ரவிராஜ்.
இதுகுறித்து ரவிராஜிடமே நாம் பேசினோம். “பாமகவை விட்டு விலகி பாஜகவில் சேர்ந்தேன். ஆனால் சமீபகாலமாகவே நான் பாஜகவில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தேன். அது ஒரு கட்சியே இல்லைங்க. நாடக பார்ட்டிங்க அது. இங்கிலீஷ்ல சொல்லணும்னா மேஜிக் பார்ட்டி. அதெல்லாம் ஒரு கட்சியாகவே பார்க்க முடியலை. இந்த நிலையில் தைலாபுரத்தில் இருந்து வந்த அழைப்பை ஏற்று மீண்டும் என் தாய் கட்சியான பாமகவுக்கு திரும்புறேன்.
டிசம்பர் 7 ஆம் தேதி புதன் கிழமை எங்க ஆதரவாளர்களோட 250 கார்கள்ல தைலாபுரம் சென்று டாக்டர் ஐயாவை சந்திக்கிறோம். என்னை போல பாமகவில் இருந்து வெளியே சென்று பலரும் மீண்டும் பாமகவுக்கு திரும்பி வருவாங்க” என்கிறார் ரவி ராஜ்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா…
–ஆரா
ஊழியர்களுக்கு அமேசான் கொடுக்கும் அதிர்ச்சி ஆஃபர்!
மாண்டஸ் புயல் எச்சரிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!