உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (செப்டம்பர் 26) சிறையில் இருந்து வெளியே வந்தார்.
வேலைவாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
பல்வேறு கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு இன்று நிபந்தனையுடன் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதைதொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் இன்று பிற்பகல் செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்தார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த நீதிபதி, உத்தரவாத பத்திரங்களை அமலாக்கத் துறை விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு, “கடைசி நேரத்தில் விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்ய சொன்னால் என்ன செய்வது?. வேண்டுமானால் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து விளக்கம் பெறுகிறோம்” என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆஜரான அமலாக்கத் துறை வழக்கறிஞர் ரமேஷ், உத்தரவாத பத்திரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜியின் உறவினர்களான சிவபிரகாசம், தியாகராஜனின் 25 லட்சம் ரூபாய்க்கான உத்தரவாதத்தை ஏற்று செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
அப்போது செந்தில் பாலாஜியின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவு நகலும் மின்னஞ்சல் மூலம் சிறைக்கு அனுப்பப்பட்டது.
இந்தநிலையில் உச்ச நீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, சட்ட ரீதியான சிறை நடவடிக்கைகளுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் செந்தில் பாலாஜி. அவரை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மாலை அணிவித்து, கட்சி கொடியை கழுத்தில் போட்டு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
செந்தில் பாலாஜியை வரவேற்க காத்திருக்கும் திமுகவினர்… போக்குவரத்து ஸ்தம்பித்தது!
ராதாரவி, சரத்குமாரே பரவாயில்லை – விஷாலுக்கு எதிராக நடிகர் உதயா காட்டம் ஏன்?