முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஏப்ரல் 22) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2023 ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் கைதாகி 10 மாதங்கள் கடந்துவிட்டது.
காவேரி மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரி செய்துகொண்ட பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி தொடர்ந்து ஜாமீன் கேட்டு சட்டப்போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
உச்ச , உயர் , சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றங்களும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுத்துவிட்டன.
33ஆவது முறையாக ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே வழக்கு தொடர்பான வங்கி ஆவணங்களின் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க வேண்டியுள்ளதால், விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதிட அனுமதி கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று, விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்கச் செந்தில் பாலாஜிக்கு நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.
அதுபோன்று, இந்த வழக்கு தொடர்பாக வங்கியிலிருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்காகச் செந்தில் பாலாஜியை இன்று நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டார்.
https://twitter.com/i/status/1782363254691619085
அதன்படி இன்று (ஏப்ரல் 22) நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருக்கு வங்கி தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டது. பின்னர், விடுவிக்கக் கோரிய மனு மீது ஏப்ரல் 25ம் தேதி முதல் வாதங்களைத் தொடங்க செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 25ஆம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.
அதன்படி 34ஆவது முறையாகச் செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
RCB vs KKR: சேர்க்கை தான் சரியில்ல… மீம்ஸ் போட்டு ஆறுதல் தேடும் ரசிகர்கள்!