ஐநா சபைக்கே போனாலும்…. பன்னீருக்கு ஜெயக்குமார் சவால்!

அரசியல்

ஓபிஎஸ் ஐ.நா சபைக்கே சென்றாலும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் வெற்றி கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு தினத்தன்று எடப்பாடி, பன்னீர் ஆதரவாளர்கள் இடையே மூண்ட மோதலால் அதிமுக தலைமை அலுவலகம் தமிழக வருவாய் துறையால் சீல் வைக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் இன்று (ஜூலை 20) தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், “அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி, தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும்” என்றும் தீர்ப்பளித்தார். இதனை தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

“இந்த தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தாலும், ஓபிஎஸ் தரப்பிற்கு இடி விழுந்தது போல் இருக்கும். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சி தலைவி அம்மாவும் கட்டிகாத்த கோவில் இது. இதனை இடிப்பது போன்ற செயலை ஓபிஎஸ் தரப்பு செய்தனர். அதற்கெல்லாம் பதிலடி தரும் விதமாக இன்றைக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வந்துள்ளது.

ஓபிஎஸ் தரப்பு அதிமுக தலைமைக் கழகம் பூட்டியே கிடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தது. ஆனால், இன்று தலைமைக் கழக சாவி எங்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் தரப்பு ஐ.நா சபைக்கே சென்றாலும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் வெற்றி கிடைக்கும்.

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தாலும், பொதுக்குழு எனும் அமைப்பின் அதிகாரப்பூர்வ முடிவுகள் எங்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. கட்சி விதிகளின்படியே எல்லாம் நடந்திருக்கின்றன.

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டில் என்ன வாதம் வைத்தாலும், எங்கள் சட்ட வல்லுநர்கள் அதை முறியடிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

க.சீனிவாசன்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

1 thought on “ஐநா சபைக்கே போனாலும்…. பன்னீருக்கு ஜெயக்குமார் சவால்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *