தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தராஜன், இன்று (ஏப்ரல் 29) முதல் தெலங்கானா மாநிலத்தில் பாஜகவுக்காக தேர்தல் பரப்புரை செய்கிறார்.
இதற்காக நேற்று மாலை தமிழிசை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார்.
தெலங்கானா பாஜக பொதுச் செயலாளர் ஜி.பிரேமேந்தர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை திங்கள்கிழமை ஹைதராபாத் வந்து மாநிலத்தில் சுமார் 10 நாட்கள் பிரச்சாரத்தில் பங்கேற்பார்” என்று தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் 2019 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் ஆளுநராக இருந்த தமிழிசை ராஜ்பவனை பிரஜா பவனாக மாற்றியிருக்கிறேன் என்று அடிக்கடி சொல்லுவார். அதாவது ஆளுநர் மாளிகையை மக்கள் மாளிகையாக மாற்றியிருக்கிறேன் என்று பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த வகையில் தெலங்கானாவில் ஆளுநராக இருந்த வகையில் அம்மாநிலத்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டும் தமிழிசை, பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ரோடு ஷோ போன்றவற்றிலும் ஈடுபடுகிறார்.
“தமிழிசை ஆளுநராக இருந்தபோது தெலுங்கானா மக்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்தி வைத்திருந்தார். மேலும் அவர் ஓரளவுக்கு தெலுங்கு பேசக்கூடியவர். அதனால் நட்சத்திரப் பிரச்சாரகராக தமிழிசை கட்சிக்கு சாதகமாக இருப்பார். இங்குள்ள தமிழ் மக்களிடமும் அவர் பேசுவார்” என்கிறார்கள் தெலங்கானா பாஜகவினர்.
அதை வலுப்படுத்தும் வகையில் நேற்று மாலை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலிலேயே மக்களை சந்தித்து தனது பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார் தமிழிசை.
ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வெறுப்புப் பேச்சு பேசினார் என்று எதிர்க்கட்சிகள் கண்டித்தபோது, தமிழ்நாடு பாஜகவில் இருந்து தமிழிசையே உடனடி விளக்கம் அளித்தார். அப்போது தமிழக பாஜகவில் எவ்வித பொறுப்பும் இல்லாத தமிழிசைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது பற்றி கட்சிக்குள் விவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் முன்னாள் ஆளுநரின் தெலங்கானா பயணம், அவருக்கு தேசிய பாஜக தலைமையில் இருக்கும் செல்வாக்கை மேலும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது என்கிறார்கள் தமிழிசையின் ஆதரவாளர்கள்.
தெலங்கானாவில் இருக்கும் 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
Gold Rate: சற்று குறைந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?
T20 WorldCup : 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது நியூசிலாந்து!