திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜனவரி 3) காலமானார்.
திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் கு.க.செல்வம். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 8,829 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் மறைவிற்கு பிறகு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்.
இதற்கிடையே பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவர் சந்தித்தது பெரும் சர்ச்சையானது. இதன் காரணமாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும் சில நிமிடங்களிலேயே தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்ட கு.க.செல்வம், திமுகவுக்கு எதிராக பேட்டி அளித்து வந்தார்.
எனினும் சிறிது காலமே அங்கு இருந்தவர், கடந்த ஆண்டு மீண்டும் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அதனையடுத்து தி.மு.க தலைமை நிலைய அலுவலக செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி கு.க. செல்வம் இன்று காலை காலமானார். அவரது மறைவை அடுத்து திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இந்த பரிவர்த்தனைகளுக்கு 1.1% கட்டணம்… யுபிஐ புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தன!