சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவராக அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனினும் உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்படாமல், தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கையில் அமர்ந்து வந்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்.
நேற்றும் சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் குறித்து பலமுறை தங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அப்போது எழுந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைத்துள்ள கோரிக்கையை மறு பரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யும்படி தங்களிடம் நான் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று பரிந்துரை செய்தார்.
இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (பிப்ரவரி 14) எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்குச் சபாநாயகர் அப்பாவு ஒதுக்கியிருப்பதாகவும், ஓபிஎஸுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ’217’ ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
அதன்படி மரபுபடி எதிர்க்கட்சித் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.பி உதயகுமார், எதிர்க்கட்சித் தலைவர் அருகே அமர்வார்.
நேற்று சட்டப்பேரவைக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சம்பளம் கட்: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
இரவிலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு!