திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி        

Published On:

| By Kalai

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று(ஆகஸ்ட் 24) திமுக-வில் இணைகிறார்.

கோவை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று மாலை 6 மணிக்கு பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆறுகுட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைகிறார்கள்.

கோவை மாவட்ட அதிமுகவில் முக்கிய நபராக பார்க்கப்படும் ஆறுகுட்டி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து இரண்டு முறை வென்று எம்.எல்.ஏ-வானவர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியின் செயல்பாடுகளில் சிறிது காலம் ஒதுங்கியிருந்த ஆறுகுட்டி ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து கடந்த ஜூன் மாதம் செய்தியாளர்களை சந்தித்து காட்டமாக பேசியிருந்தார்.

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்வது சரியல்ல. ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.

ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு பதிலாக வேறு யாராவது அதிமுக பொதுச்செயலாளராக வந்தால் நன்றாக இருக்கும். அதிமுகவை சாதிக்கட்சி போல் மாற்ற வேண்டாம் என்று பல்வேறு கருத்துகளை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆறுகுட்டி மற்றும் அவரது மகனிடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில்தான் ஆறுகுட்டி இன்று திமுகவில் இணைகிறார். “அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆறுகுட்டி சந்தித்து பேசினார்.

அதிமுகவில் நடக்கும் கோஷ்டி மோதல் தனக்கு பிடிக்கவில்லை என்றும் தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில்தான் இந்த இணைப்பு நடக்கிறது” என்கிறார்கள் ஆறுகுட்டி ஆதரவாளர்கள்.

.கலை.ரா

பொள்ளாச்சி பொதுக்கூட்டம்: திமுகவில் இணைந்த அதிமுக, பாஜகவினர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share