தான் தோன்றித்தனமாக பேசும் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச தகுதியில்லை என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 25 ) நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் அண்ணாமலை, “ தமிழ்நாட்டில் மிகப்பெரிய டெண்டர் கட்சி. கூவத்தூரில் ஏலம் விட்டு எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் கொடுத்து ஆட்சியில் அமர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. அண்ணாமலையை பற்றி சொல்வதற்கு எடப்பாடி எனும் தற்குறிக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது” என்று மிகக்கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 26) கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கே.பி.முனுசாமி, “அண்ணாமலை மக்களைச் சந்திக்காமல், ஊடகங்களையும் பத்திரிகைகளையும் சந்தித்து அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார். அவர் தலைவராக பொறுப்பேற்ற பிறகு இந்த மூன்று ஆண்டு காலத்தில் சொன்ன கருத்துகளை பார்த்தால், ‘தற்குறி’ எப்படி பேசுவாரோ அப்படி பேசுகிறார்.
முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். இந்த தற்குறி ஒரு ஆளுமை மிக்க தலைவரை பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது.
2024 மக்களவைத் தேர்தலின் போது, ஊடகங்களிடம் அண்ணாமலை பல்வேறு விதமான செய்திகளை சொன்னார். இந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி 25 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று சொன்னார். அதிமுக காணாமல் போகும் என்று சொன்னார்.
தேர்தல் முடிந்துவிட்டது. நாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி என்று சொன்ன அண்ணாமலையை பார்த்து நான் கேட்கிறேன், 25 இடம் வேண்டாம், ஒரு இடத்தில் வெற்றி பெற்றீர்களா?
ஏற்கனவே பாஜக வெற்றி பெற்ற கன்னியாகுமரியில் கூட இப்போது வெற்றி பெறவில்லை. ஒரு தலைமை பொறுப்பில் இருக்கக் கூடிய அண்ணாமலைக்கு பயம் வந்துவிட்டது.
தான்தோன்றித்தனமாக பேசுவதால் தலைமை பொறுப்பு இருக்காது … இருக்கிற வகையில் எதாவது சொல்லிவிட்டு செல்லலாம் என அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார்.
இதை உணர்ந்து நிச்சயமாக பாஜக தலைமை அண்ணாமலையை தலைமை பொறுப்பில் இருந்து நீக்குவார்கள் என்று நம்புகிறேன். வெளியேறும் நிலையில் லண்டனுக்கு படிக்கச் செல்கிறேன் என்று எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.
அவர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்… எடப்பாடி பழனிசாமி அரசியல் பின்புலம் இல்லாமல் 52 ஆண்டுகாலம் இந்த கட்சிக்காக உழைத்திருக்கிறார்.
தன்னுடைய கொள்கையில் இருந்து பிறழாமல் ஒரே முகத்தோடு தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து அரசியல் செய்கிறார். அதனால் தான் எந்தவிதமான அரசியல் பின்புலம் இல்லாதவர் இன்று ஒரு இயக்கத்துக்கு தலைமை பொறுப்பேற்றியிருக்கிறார்.
அண்ணாமலையை போல எங்கோ சுத்திவிட்டு, யாருடைய சிபாரிசால் மாநில தலைவர் பதவிக்கு வந்துவிடவில்லை.
எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது.
2026ல் அதிமுக நான்காவது இடத்துக்கு சென்றுவிடும் என்று சொல்கிறார். இப்போதும் சொல்கிறோம் 2026ல் நடைபெறும் தேர்தல் திமுக – அதிமுகவுக்கும் இடையேயானது. அப்போது எடப்பாடி பழனிசாமிதான் ஆட்சிக் கட்டிலில் அமர்வார்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அம்மா இப்படி செய்யாதீர்கள்… இன்போஸிஸ் சுதா மூர்த்திக்கு புத்திமதி சொன்ன கண் தெரியாத பூசாரி!
கட்டதுரை கெட்ட துரையா? – மலையாள நடிகை வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு!