கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் மற்றும் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற பாறை கருப்பசாமி கோயிலின் உற்சவ விழா ஜூன் 24 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த கோவில் திருவிழாவின் போது முதல் மரியாதை அளிப்பதில் கருவனூர் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதமானது இரு தரப்பு மோதலாக மாறியது. வேல்முருகன் தரப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர்.
வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து, பொன்னம்பலத்தின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். பொன்னம்பலம் வீட்டின் அருகில் இருந்த வீடுகளிலும் கற்களை எறிந்தனர். இதில் பொன்னம்பலத்தின் உறவினர்கள் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வேல்முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாகினர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக சத்திரப்பட்டி போலீசார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் மற்றும் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் ஆகிய இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம், அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம், தலைமறைவாக இருந்த திமுக கிளை செயலாளர் வேல்முருகன், செந்தமிழன், ராஜமோகன் ஆகிய 6 பேரை சத்திரபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மோனிஷா