“காமராஜர் ஆட்சியை அமைப்போம், அதற்கான திட்டங்களை முன்னெடுப்போம்” என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சி தலைவராக பதவி ஏற்ற நிகழ்ச்சியில் கூறினார்.
காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.
அவர், பிப்ரவரி 21ஆம் தேதி பதவி ஏற்பார் என்று காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்படிருந்த நிலையில், இன்று அண்ணா சாலையில் இருந்து சத்திய மூர்த்தி பவனுக்கு திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
தமிழ்நாடு முழுவதும் இருந்தும் செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் பெருமளவில் வந்திருந்ததால் சத்தியமூர்த்தி பவன் அமைந்துள்ள சாலை பகுதியில் கூட்டம் அலைமோதியதை காணமுடிந்தது.
அதுபோன்று பதவி ஏற்பு விழா மேடை காமராஜர் நினைவு இல்லத்தின் மாதிரி போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட செல்வப்பெருந்தை பேசுகையில்,
“சவால்களை சமாளித்து வெற்றிக் காண்பதுதான் காங்கிரஸ். ஆனால் இப்போது, தேசத்திற்கே சவால் வந்திருக்கிறது. பிரித்தாலும் கொள்கை நடந்துகொண்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது.
இதையெல்லாம் தடுக்கப்பட வேண்டும் என்றால் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்றைக்காவது பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று எங்களுக்கு கனவு உண்டு. அதற்கு எல்லோரும் சேர்ந்து அஸ்திவாரம் போடுவோம். இன்று இல்லை என்றாலும், ஒருநாள் அது நடந்தே தீரும். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதற்கான திட்டங்களை நாம் முன்னெடுப்போம். காமராஜர் ஆட்சி அமைப்போம்” என தெரிவித்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…