அமெரிக்க பழங்குடியின மக்களின் பொன்மொழியை சொல்லி தமிழகத்தை பசுமையானதாக மாற்ற அனைவரும் முன்வரவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
காலநிலை மாற்றத்தால் அதிகப்படியான வெப்பம், மழை சீரானதாக இல்லை. மழைக்காலம், வெயில்காலம் என்று சொல்ல முடியாத அளவுக்கு காலநிலை மாறியிருக்கிறது.
உலகின் சில இடங்களில் அனல்காற்று அதிகமாக வீசுகிறது. இயற்கையை, பசுமையை நாம் மறந்ததால் ஏற்படக்கூடிய விளைவுதான் என்பதை எச்சரிக்கையாக கவனிக்கவேண்டும்.
அதற்கு நாம், வனத்தை காக்கவேண்டும். காடுகளை, பசுமைப்பரப்புகளை மீட்டெடுக்கவேண்டும். இயற்கை நீர்நிலைகளை காக்கவேண்டும். இருக்கும் நீர்நிலைகளை தூர்வாரி சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
மண்ணில் வளம் கெடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். காற்று மாசுபடுத்தாமல் கவனிக்கவேண்டும். பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கவேண்டும். எனவே மீண்டும் மஞ்சப்பை என்ற நிலையை எடுத்திருக்கிறோம்.
நிலையான வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் வனமும், மரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வனங்களை பாதுகாப்பதில் பசுமை தமிழ்நாடு இயக்கம் கவனம் செலுத்தவேண்டும்.
ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் சுற்றுச்சூழலை மேம்படுத்த இருக்கிறோம். வனப்பகுதியின் சமூக பொருளாதாரம் மேம்படுத்தப்பட இருக்கிறது. தரம் குன்றிய வன நிலப்பரப்புகளை மறு சீரமைப்பு செய்து அவ்விடத்தில் புதிய பணிகள் மேற்கொள்வதற்காக நபார்டு வங்கி ரூ. 481 கோடி நிதி வழங்கியிருக்கிறது.
இயற்கையை காத்தல் என்பது மக்களுக்கு தொடர்பு இல்லாததுபோல் நினைக்கிறார்கள். 2018 கஜா புயலால் சிலபகுதிகள் பாதிக்கப்பட்டன. பிச்சாவரத்தில் உள்ள அலையாத்தி காடுகள் தான் புயலை தாங்கி மக்களை காத்தது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான திறனை நாட்டு மரங்கள் தருகின்றன. எனவே அதிகளவிலான நாட்டு மரங்களை நடுவதே இந்த பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமாகும்.
அடுத்த 10 ஆண்டுகளில் நகர்புறத்தில் அதிகமான இயற்கை சூழலை உருவாக்கவேண்டும். பொருளாதார முக்கியத்துவத்தை மனதில் வைத்து சந்தனம், செம்மரம், ஈட்டி போன்ற மரங்களை வளர்க்க உழவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
மாநிலத்தின் உணவு உற்பத்தியில் சமரசம் செய்யாமல் மர உற்பத்தியை பெருக்க முயற்சிப்போம். இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளை வசிக்கக்கூடிய, பழங்குடியினர், உழவர்கள் போன்றவர்களின் வருமானத்தை பெருக்க இந்தத்திட்டம் உதவும் என்று நம்புகிறேன்.
அமெரிக்க பழங்குடியின மக்களின் பொன்மொழியான கடைசி மரமும் வெட்டப்பட்ட பின்னர் தான், கடைசி ஆறும் நஞ்சால் நிரப்பப்பட்ட பின்னர் தான், கடைசி மீனும் பிடிபட்ட பின்னர்தான் பணத்தை சாப்பிட முடியாது என்பதை உணர்வோம், எனவே தமிழகத்தை பசுமையானதாக மாற்ற அனைவரும் முன்வரவேண்டும் என்று முதலமைச்சர் பேசினார்.
கலை.ரா
“தமிழகத்தில் அதிகரித்து வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டும்” – ஓ. பன்னீர் செல்வம்
வான் தீவுக்கு சென்ற கனிமொழி எம்.பி