வனத்துறை அமைச்சருக்கு சொந்தமான இடத்தில், சந்தன மரம் கடத்தி வந்து ஆயில் எடுத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த விவகாரத்தில் வனத்துறை அமைச்சரின் பதவி பறிபோகப் போகிறது என்றும், மேலும் அவரது மகளும் கைது செய்யப்படுவார் என்கிறார்கள் புதுச்சேரி போலீசார்.
கேரளா மாநிலத்திலிருந்து சந்தன மரங்களைக் கடத்தி வந்து ஆயில் எடுத்து, அதில் வரும் வருமானத்தின் ஒரு பகுதி தீவிரவாத கும்பலுக்குப் போவதாக தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏவிற்கு தெரிய வந்ததும் கேரளா மற்றும் தமிழ்நாடு வனத்துறை அலர்ட் செய்யப்பட்டது.
தேசிய புலனாய்வு முகமையின் தகவலை அடுத்து கேரளா மற்றும் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளும், மாநில புலனாய்வு அமைப்புகளும் தீவிரமான விசாரணையிலும் சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஜூன் 5 ஆம் தேதி கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு சந்தன மரங்களை கடத்தி வருவதாக தகவலைக் கேள்விப்பட்டு வனத்துறை அதிகாரிகள் அலர்ட் ஆனார்கள். சேலம் வனத்துறையினர் மகுடஞ்சாவடி நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான கன்டெய்னர் வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சுமார் 1500 கிலோ சந்தனக் கட்டைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
வேன் ஓட்டுநரான மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சுகைல் மற்றும் அவருக்கு உதவியாக வந்த முகமது பசில் ரகுமான் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முகமது மிசைல், முகமது அப்ரார், பஜாஸ், உம்மர் ஆகியோரைக் கைது செய்து விசாரணை செய்ததில், புதுச்சேரி வில்லியனூர் அருகில் உள்ள உளவாய்க்கால் பகுதியில் உள்ள ஒரு தேனீ பண்ணைக்கு இந்த கட்டைகள் அனுப்பப்படுவதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
அந்த தேனீ பண்ணையை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், 2022இல் தனது மகள் ஆஷாவுக்கு தானம் செட்டில்மென்ட் எழுதி கொடுத்துள்ளார். அதற்கு முன்பு அது அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பெயரிலேயே இருந்துள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு இந்த தகவல்கள் கிடைத்ததும் வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை அழைத்து கடுமையாகப் பேசி எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் புதுச்சேரியில் உள்ள தேனீ பண்ணைக்கு நேற்று முன்தினம் ஜூன் 13 ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் வந்துள்ளனர். அப்போது அவர்களை உள்ளே போக விடாமல் அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் ஆட்கள் தடுத்துள்ளனர். அதையும் மீறி உள்ளே சென்று சோதனை செய்ததில் சந்தன மரத் தூள் மற்றும் கட்டைகள் உட்பட ஆறு டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த பண்ணையில் பேப்பர் அட்டைப் பெட்டி தயாரிப்பது, விறகு கட்டைகளை பொடியாக்கி விற்பது, ஆடு மாடுகள் வளர்ப்பது போன்ற தொழில்கள் நடைபெற்று வந்துள்ளன. அத்துடன் கூடுதலாக சந்தன ஆயில் எடுக்கும் கம்பெனியும் இயங்கியுள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பல கோடி ரூபாய் அரசுக்கு வரி கட்டாமல் லைசென்ஸ் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக இந்த ஆயில் கம்பெனியை நடத்தியுள்ளனர்.
இதைப்பற்றி புதுச்சேரி வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம்.
”வனத்துறை அமைச்சராக இருக்கும் தேனீ ஜெயக்குமாரின் தனிச் செயலாளராக இருப்பவர் மனோகர். இவர் முதலில் ஆசிரியராக இருந்தார். பின்னர் வில்லியனூர் பெரிய கோயிலுக்கு தனி அதிகாரியாக இருந்தபோது மான் கறி பிரச்சனையில் சிக்கி பின்னர் வெளியேறியதுடன், சிறுமி தொடர்பான பாலியல் பிரச்சனையிலும் சிக்கியவர். அவரது அதிகாரத்தால் வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் பல முறை கேரளாவுக்குச் சென்று சந்தன மரங்களை கடத்தி வந்துள்ளோம். வனத்துறை வாகனம் என்பதால் யாரும் மறித்து சோதனை செய்யமாட்டார்கள். ஒவ்வொரு முறையும் கேரளாவுக்கு சென்று வருவதற்கு அரசு செலவில் 13 ஆயிரத்திற்கு டீசல் அடிப்போம்” என்ற தகவல் கொடுத்தனர்.
வனத்துறை வாகனத்தில் சந்தன மரம் கடத்தியது பற்றி புதுச்சேரி வனத்துறை உயர் அதிகாரி அருள் ராஜ் அவர்களை தொடர்புகொண்டு கேட்டோம். ”சார் நான் சமீபத்தில் தான் பொறுப்பேற்றேன். டாக்குமெண்ட்களை கீழே உள்ள அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். விசாரித்து உண்மையை சொல்கிறேன்” என்றார்.
வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரைத் தொடர்புகொண்டு மின்னம்பலம் ரிப்போர்ட்டர் என்று அறிமுகம் செய்து கொண்டு சந்தன மரம் கடத்தல் சம்பந்தமாக கேட்டதும், ஹலோ ஹலோ சரியாக கேட்கவில்லை என்று அருகில் இருந்த உதவியாளரிடம் போனைக் கொடுத்து என்ன விசயம், யார், எந்த ரிப்போர்ட்டர் என்று பேசு என்றார். அவரது உதவியாளர் போனை வாங்கி நீங்கள் என்ன ரிப்போர்ட்டர், என்ன ஊர், பெயர் கேட்டுவிட்டு நேராக வாங்க பேசலாம் என்று லைனைத் துண்டித்தார்.
தற்போது சந்தன மரம் கடத்தி ஆயில் எடுக்கும் கம்பெனியின் வழக்கை என்.ஐ.ஏ கையில் எடுத்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை பண்ணையின் இடத்திற்கு சொந்தக்காரரான அமைச்சரின் மகளை கைது செய்யவும், வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை விசாரிப்பதற்கு விரைவில் சம்மன் அனுப்பவும் உள்ளது.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவும் மகளைக் காப்பாற்றவும் பாஜக உதவியை நாடி வருகிறார் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்.
தேனீ ஜெயக்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லியுள்ளார் முதல்வர் ரங்கசாமி என்கிறார்கள் தலைமை செயலக அதிகாரிகள்.
– வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை வனப்பகுதியில் பெண் புலியின் சடலம் மீட்பு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன்? எடப்பாடி விளக்கம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன்? எடப்பாடி விளக்கம்!