”நாட்டின் பாதுகாப்பையும், மத சுதந்திரத்தையும், குடிமக்களின் மனசாட்சியையும் கட்டாய மத மாற்றம் மோசமாக பாதிக்கும்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சூனியம், மூடநம்பிக்கை மற்றும் கட்டாய மத மாற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், கட்டாய மதமாற்றத்தை இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்கக் கோரியும், இதனால் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இவ்வழக்கினை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு,
“ கட்டாய மத மாற்றம் நடப்பது உண்மை என கண்டறியப்பட்டால், அது மிகவும் தீவிரமான பிரச்சினையாகும். இது இறுதியில் தேசத்தின் பாதுகாப்பு, மக்களின் மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்தை பாதிக்கலாம்.
அரசியலமைப்பின்படி நாட்டில் மத சுதந்திரத்திற்கு உரிமை உள்ளது. ஆனால் கட்டாய மதமாற்றங்களுக்கு அது பொருந்தாது என்று நீதிமன்றம் கூறியது.
எனவே கட்டாய மதமாற்றத்தை நிறுத்த மத்திய அரசு நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இல்லையெனில், மிகவும் கடினமான சூழ்நிலை நாட்டில் உருவாகும். இந்த விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும், இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து,
நவம்பர் 22-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்கு விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு : சென்னையில் மீண்டும் போலீஸ் ரெய்டு!
தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்!