பொன்னியின் செல்வனுக்காக எம்.ஜி.ஆர். போராடியது ஏன்?

Published On:

| By Aara

பொன்னியின் செல்வன் நாவல்  இப்போது லைக்கா தயாரிப்பில்  மணிரத்னம் இயக்கத்தில் சினிமாவாக வருகிறது.   இந்த  பொன்னியாற்றங்கரையில் இதுவரை எத்தனையோ சினிமா ஜாம்பவான்கள் சினிமா வடிவில் குடித்துவிடலாம் என்று தவம் கிடந்திருக்கிறார்கள், போராடியிருக்கிறார்கள். ஆனால் முடியவில்லை.

இதற்கான முக்கியமான காரணம் என்ன தெரியுமா? பொன்னியின் செல்வன் பெண்களின் பேராதரவு பெற்ற நாவல்.

ஐம்பதுகள் தொடங்கி, அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள், தொண்ணூறுகள் வரையிலும் கூட அதன் பின் சீரியல் என்னும் சுனாமி தமிழ்ப் பெண்களை நோக்கி பாய்ந்தும் கூட பொன்னியின் செல்வன் என்ற காவிரிப் புது புனல்  மீது பெண்களுக்கான ஈர்ப்பு குறையவே இல்லை.

இந்த ஒற்றைக் காரணத்தின் அடிப்படையிலேயே பொன்னியின் செல்வனை சினிமா ஆக்கினால் அது பெண்களின் மகத்தான ஆதரவோடு வரவேற்பைக் குவிக்கும் என்று கணக்குப் போட்டார்கள் பலர்.

அவர்களில் முதன்மையானவர் எம்.ஜி.ஆர்.  எப்போதுமே பொதுமக்களுக்கான சினிமாவை உருவாக்குவதில் எம்.ஜி.ஆர்  கைதேர்ந்தவர். அந்த வகையில்தான் பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக கொண்டுவரவேண்டும் என்ற பேராவல் எம்.ஜிஆருக்கு இருந்தது.

கல்கியின் மீதும் பொன்னியின் செல்வன் மீதும் பெரும் பற்று வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். கல்கி 1954 ஆம் ஆண்டு காலமான நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்று பங்கேற்றார் எம்.ஜி.ஆர்.

1959 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாகக் கொண்டு வருவதற்கான அறிவிப்பை எம்ஜிஆர் வெளியிட்டார்.

படத்தை எவ்வாறு கொண்டுவருவது பற்றிய ஆலோசனைகளையும் கூட தொடங்கிவிட்டார். எம்.ஜி.ஆருக்கு இருந்த சிக்கல் என்னவென்றால்… பொன்னியின் செல்வனை சினிமா ஆக்கும்போது, அதில் தான் ராஜராஜ சோழனாக நடிப்பதா வந்திய தேவனாக நடிப்பதா என்பதுதான்.

ஏனென்றால் ராஜராஜன் சோழர்களின் பேரரசன், தமிழர்களின் அடையாளம். அதேநேரம் வந்தியத் தேவன் தான் பொன்னியின் செல்வன் நாவல் முழுதும் பல்கிப் பரவியிருப்பவன்.

இந்த பின்னணியில்தான், ராஜராஜனா, வந்திய தேவனா என்று தொடக்கத்திலேயே பெருங்குழப்பம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. பிறகு தனக்கு ராஜ ராஜசோழனே சரியாக வரும் என்று கணக்கு போட்டு முத்துராமனை வந்தியத் தேவன் பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று யோசித்தார் எம்.ஜி.ஆர்.

பிறகு நடிகர் சிவக்குமாரை வந்திய தேவனாக நடிக்க வைத்து தான் ராஜ ராஜ சோழனாக அதாவது அருண்மொழி வர்மனாக நடிக்கலாம் என்று திட்டமிட்டார். ஒரு கட்டத்தில் ராஜராஜன், வந்தியத் தேவன் இரண்டு கதா பாத்திரங்களிலும் தானே இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

1964 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் சினிமாவுக்கான படப்பிடிப்பு தளங்கள் கூட முடிவு செய்யப்பட்டுவிட்டன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.

இவ்வளவு பெரிய சரித்திர நாவலை சினிமா ஆக்கும்போது சிவாஜி இல்லாமலா? சிவாஜியையும் இந்த பொன்னியின் செல்வனுக்குள் கொண்டுவரவேண்டும் என்றும் விரும்பியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஆனால் பல்வேறு ஆலோசனைகள், திரைக் கதைக்கான முன்னெடுப்புகள் எல்லாம் செய்யப்பட்டும் பொன்னியின் செல்வன் என்ற  காவியத்தை சினிமாவுக்குள் கொண்டுவர எம்.ஜி.ஆராலேயே முடியவில்லை.

இந்த பொன்னியின் செல்வன் ஆசையினாலோ என்னவோ… ராஜராஜனை காவிரியில் இருந்து காப்பாற்றும் ஒரு காட்சியை மட்டும் தனது ஒரு படத்தில் வைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். தனது சரித்திர ஆசையை  தீர்த்துக் கொள்வதற்காகத்தான் அதன் பின்  மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற சரித்திரப் படத்தில் நடித்தார் எம்.ஜி.ஆர்.

அடுத்த கட்ட போராட்டமாக கமல்ஹாசன் பொன்னியன் செல்வனை படமாக்க முனைந்தார். பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கி அதில் வந்திய தேவன் பாத்திரத்தில் நடிக்க விரும்பினார் கமல்.

காதலும், வீரமும் நிரம்பிய கதாபாத்திரம் என்பதால் வந்தியத் தேவன் மீது கமலுக்கு அலாதி பிரியம். ஆயினும் அவராலும் பொன்னியின் செல்வனை திரையில் கொண்டுவர இயலவில்லை. இந்த நிலையில்தான் மருதநாயகம் போன்ற  கனவுத் திட்டத்தில் இறங்கினார் கமல். 

அதன் பிறகு பொன்னியின் செல்வனை  நாடக வடிவில் சிலர் எழுதினார்கள். மேடைகளில் அரங்கேற்றினார்கள். பொன்னியின் செல்வனை காமிக்ஸ் வடிவத்தில் உருவாக்கி சிறுவர்களிடம் கொண்டு சேர்த்தார் சரவணவேலு.

எம்ஜி.ஆரை  வந்தியதேவனாக வைத்து ஒரு ட்ரைலர் கூட உருவாக்கப்பட்டது. 
இந்த போராட்டங்களை எல்லாம் தாண்டிதான் இன்று இயக்குனர் மணி ரத்னம் திரை வடிவத்துக்கு கொண்டுவந்திருக்கிறார் கல்கியின் எழுத்து பிரம்மாண்டத்தை.

வேந்தன்

சிறப்புக் கட்டுரை: பொன்னியின் செல்வன்- கல்வெட்டுகளும் கல்கியின் கற்பனையும்!

காங்கிரஸ்: அடுத்த தலைவர் திக் விஜய் சிங்? கெலாட் ஒதுங்கிய பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel