ராஜன் குறை
உண்ணும் உணவில் கலப்படம் செய்வது தவறானது. அதே போல அரசியலில் மத உணர்வுகளைக் கலப்பதும் தவறானது. காரணம், நமது மக்களாட்சி அரசியல் அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்களை குடிமக்களாகத்தான் பார்க்கிறது. அதனால் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் எதிரிகளை வீழ்த்த நினைப்பது பிற்போக்கான, மக்களாட்சி விழுமியங்களுக்கு எதிரான அரசியல். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வர் பவன் கல்யாணும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகனுக்கு எதிராக மத உணர்வுகளைத் தூண்ட முயற்சி செய்வது கண்டனத்திற்குரியது. இதன் பின்னணியை சற்றே விரிவாக அறிந்துகொள்வது நாட்டில் மதவாத அரசியல் எடுக்கும் வடிவங்களைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்களின் புனிதத் தலமாக இருந்து வருகிறது. பல்வேறு மன்னர்கள் அதற்கு அளித்த நகைகள், செல்வங்கள் காரணமாக அது பெற்றிருந்த புகழால், போர்த்துகீசிய கடற்கொள்ளையர்கள் பதினாறாம் நூற்றாண்டில் அதனை கொள்ளையடிக்க திட்டமிட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுவர். இன்றும்கூட திருப்பதி கோயிலுக்கு விலையுயர்ந்த பொருட்களை கொடுத்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதனால் பெரும் செல்வந்தர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் விலையுயர்ந்த ஆபரணங்களைக் காணிக்கையாக அளிப்பார்கள் அல்லது உண்டியலில் போடுவார்கள். மூட நம்பிக்கைகளின் உச்சம் செல்வந்தர்களின் திருப்பதி கோயில் பக்தி எனலாம். எந்த பாவத்தை செய்து பணம் சம்பாதித்தாலும் திருப்பதி கோயிலுக்குக் காணிக்கை செலுத்திவிட்டால் பாவம் போய்விடும் என நம்புபவர்கள் இருக்கிறார்கள்.
நாடு முழுவதும் பல லட்சம் ஆலயங்கள் இருந்தாலும், ஒரு சில ஆலயங்கள் முக்கிய தலங்களாக, புனிதத் தலங்களாக மாறுவது வழக்கம். அதுபோல திருப்பதி ஆலயம் அரசர்கள் முதல் ஆண்டிகள் வரை பலரும் நாடி வந்து வழிபடும் தலமாக இருந்து வந்துள்ளது. இந்த ஆலயத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் லட்டு என்ற இனிப்பு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பழக்கம் தோன்றியுள்ளது. இது காலப்போக்கில் மிகவும் பிரபலமடைந்து இன்றைக்கு ஒரு நாளைக்கு 35 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படும் மிகப் பெரும் தொழிற்சாலையாக மாறியுள்ளது. லட்டு விற்பனையினால் மட்டும் ஆலயத்திற்கு ஆண்டு வருமானம் ஐந்நூறு கோடி ரூபாய் கிட்டுவதாகத் தெரிகிறது.
லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யின் தரம்
இந்த லட்டினை தயாரிக்க தேவையான நெய்யினை ஆலய நிர்வாகம் டெண்டர் மூலம் ஒப்பந்தக்காரர்களை இறுதி செய்து அவர்களிடம் வாங்கி வருகிறது. அப்படி ஓர் ஒப்பந்தக்காரர் அனுப்பிய நெய்யில் சில கொள்கலன்களில் இருந்த நெய் சற்றே தரமற்று இருப்பதாக அவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. அவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியதுடன், அந்த நெய்யினை பரிசோதனை செய்ய அதற்கான பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பியுள்ளார்கள்.
அந்த பரிசோதனை கூடங்களின் ஆய்வில் அனுப்பப்பட்ட நெய்யில் கொழுப்புச் சத்து நிர்ணயிக்கப்பட்ட அளவில் இல்லை என்பதை S மூலக்கூறு என்ற வேதியியல் அளவீட்டின் மூலம் கணித்துள்ளார்கள். அதற்குக் காரணம் நெய்யில் வேறு சில கொழுப்புகள் கலக்கப்பட்டதாக இருக்கலாம் என்று ஐயம் தெரிவித்துள்ளனர். அந்தக் கொழுப்புகளில் சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய்கள் போன்ற தாவர எண்ணெய்களும், பாம் ஆயிலும், மீன் எண்ணெயும், மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு ஆகியவையும் இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இவற்றில் எவையெல்லாம் இருந்தன என்பதை உறுதியாகக் கூறவில்லை. மேலும் பால் கறக்கப்பட்ட பசுவின் தீவனம், அதன் உடல்நிலை ஆகியவை காரணமாகவும் இப்படிப்பட்ட அளவீடுகள் வரலாம் என்றும் கூறியுள்ளனர். சில சமயங்களில் அளவீடுகள் தவறாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். எனவே மிருகக் கொழுப்புகள் கலந்திருந்தன என்பது நிறுவப்பட்ட உண்மையல்ல.
இந்த சோதனை அறிக்கைகள் ஜூலை மாதமே அனுப்பப்பட்டுவிட்டாலும் அவற்றை பல நாட்கள் கழித்து திடீரென முதலமைச்சர் சந்திரபாபு பொதுவெளியில் அறிவித்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மேலும், சோதனைக்கு அனுப்பப்பட்ட நெய்யில் லட்டு தயாரிக்கப்படவில்லை என்னும்போது, லட்டில் மிருகக் கொழுப்புகள் கலந்திருந்தன என்று கூறுவது பக்தர்களிடையே பதற்றத்தை உருவாக்காதா என்ற கேள்வியும் எழுகிறது. சோதனைக்கு அனுப்பப்பட்டது தயாரிக்கப்பட்ட லட்டு அல்ல; அதற்காக வாங்கப்பட்ட நெய்யின் கொள்கலன்களில் சில மட்டுமே என்பதை திரித்து, லட்டுகளில் மிருகக் கொழுப்புகள் கலந்து தயாரிக்கப்பட்டதாகக் கூறுவதை திருப்பதி தேவஸ்தானமே மறுத்துள்ளது.
ஆந்திரப் பிரதேச அரசியல்
ஆந்திரப் பிரதேச அரசியலில் காங்கிரஸ் கட்சி மட்டுமே 1984 வரை கோலோச்சி வந்தது. சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சி உறுப்பினராகத்தான் அரசியல் வாழ்வைத் துவங்கினார். அவர் மாமனார் என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை துவங்கிய பிறகு அதில் இணைந்தார். ஒருகட்டத்தில் வயதால் தளர்ந்த என்.டி.ராமராவை ஓரம் கட்டிவிட்டு கட்சியைக் கைப்பற்றி முதல்வரானார். அதன்பின் காங்கிரஸும், தெலுங்கு தேசமும் மாற்றி, மாற்றி தேர்தல்களில் வெற்றி பெற்றன. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி காங்கிரஸின் செல்வாக்கு மிக்க தலைவர் ஆனார். சந்திரபாபு நாயுடு ஒன்றிய அரசிலும் காங்கிரஸுக்கு எதிராக முதலில் ஐக்கிய முன்னணி தலைவராகவும், பின்னால் பாரதீய ஜனதா கட்சி ஆதரவாளராகவும் விளங்கினார்.
தெலங்கானா தனி மாநில கோரிக்கையை அவர் ஆதரிக்காததால் தெலங்கானா மாநிலம் தோன்றியவுடன் அதில் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவை இழந்தது. ஆனால், தெலங்கானா இல்லாத ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சியை கைப்பற்றினார். இவர் ஆட்சியில் பெருகிய அதிருப்தியால் 2019-ம் ஆண்டு, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி துவங்கிய தனிக்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸிடம் தோல்வியடைந்தார். ஜெகன் அரசால் 2023-ம் ஆண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடந்த தேர்தலில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடனுடம், பாஜகவுடனும் கூட்டணி அமைத்தார் சந்திரபாபு நாயுடு. அந்தக் கூட்டணி பெருவெற்றி பெற்றது. ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதினொரு தொகுதிகளில் மட்டுமே வென்றாலும், நாற்பது சதவிகித வாக்குகளைப் பெற்றது. அதனால் ஜெகனின் செல்வாக்கை முற்றிலும் சிதைக்க சந்திரபாபு நாயுடு விரும்புகிறார் என கருதலாம்.
இந்தப் பிரச்சினையில் ஜெகன் கிறிஸ்துவராக இருப்பது முக்கியமான பரிமாணம் ஆகும். ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டி, தாயார் விஜயம்மா ஆகியோர் தங்களை கிறிஸ்துவர்கள் என்று அறிவித்துக் கொண்டனர். ஜெகனும் பல சமயங்களில் கிறிஸ்துவர் என்பதால் இந்து விரோதி என்றும், இந்துக்களை மதம் மாற்ற முயல்பவர் என்றும், இந்து கோயில்களை புறக்கணிக்கிறார் என்றும் தெலுங்கு தேசம் கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆனால், ஒய்.எஸ்.ஆர் குடும்பத்தில் அனைவரும் கிறிஸ்துவர்கள் அல்லர். அவர்கள் உறவினர்கள் பலர் இந்துக்களாகவும் உள்ளனர். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி நாங்கள் இந்துக்கள், கிறிஸ்துவர்கள் என்ற பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், இரண்டு மதங்களையும் நேசிப்பவர்கள் என்றும் கூறியுள்ளார். ஜெகன் திருப்பதிக்குச் சென்று வழிபடும் பழக்கம் உள்ளவர். சுவாமி சுவரூபானந்த சரஸ்வதி என்ற சந்நியாசியின் சீடர்.
இந்தப் பின்னணியில்தான் திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரத்தை, கோயில் நிர்வாகத்தின் பிரச்சினையாகப் பார்க்காமல், நேரடியாக ஜெகனை குற்றம் சாட்டியுள்ளார் சந்திரபாபு நாயுடு. ஜெகன் பதிலுக்கு சந்திரபாபு நாயுடு பக்தர்களை அரசியல் ஆதாயத்திற்காக புண்படுத்துவதாக பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். லட்டு தயாரிக்க நெய் வாங்குவது திருப்பதி கோயில் நிர்வாகம்தான் என்றும், அதற்கும் மாநில அரசுக்கும் தொடர்பில்லை என்றும் கூறியுள்ள அவர், திருப்பதி கோயில் நிர்வாக டிரஸ்டில் பாஜக உறுப்பினர்களும் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், ஜெகன் வீட்டினை பாரதீய ஜனதா கட்சியினர் கல்வீசி தாக்கியுள்ளனர்.
திருப்பதி கோயிலில் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று சந்திரபாபு கூறியுள்ளார். பவன் கல்யாண் ஒரு வாரம் பிராயச்சித்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இந்தப் பிரச்சினையில் மத உணர்ச்சியைத் தூண்டி ஜெகன்மோகனின் அரசியல் செல்வாக்கை சிதைக்க முயற்சி செய்வது வெளிப்படையாக உள்ளது.
மனிதர்களின் உணவும், தெய்வங்களின் உணவும்
திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டு தரமான நெய்யினால் தயாரிக்கப்பட வேண்டும் என்பதிலும், அதில் கலப்படம் செய்யப்படக் கூடாது என்பதிலும் ஐயம் இல்லை. திருப்பதியில் மட்டுமல்ல, எங்கு தயாரிக்கப்படும் உணவுப் பொருளிலுமே கலப்படம் நிகழக் கூடாது என்பதுதான் முக்கியம். ஆனால், இந்தப் பிரச்சினை ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினையாக எழுப்பப்படவில்லை. லட்டு சாப்பிட்டதால் ஆயிரக்கணக்கானோர் உடல்நிலை பாதிக்கப்பட்டது என்பதால் பிரச்சினை தோன்றவில்லை. லட்டு தயாரிக்க ஒப்பந்தக்காரர்கள் அனுப்பிய நெய்யை சோதித்தபோது அதில் சில கொள்கலன்கள் தரமற்ற நெய்யாக இருப்பதும், அதில் கலப்படம் நிகழ்ந்திருக்கலாம் என்பதும்தான் பிரச்சினை.
ஆனால், இந்த விஷயத்தில் கோயிலின் புனிதமே கெட்டுவிட்டதாக சொல்வதுதான் வியப்பிற்குரியது. அதிலும் மிருகக் கொழுப்பு என்பது புனிதத்திற்கு எதிரானது என்று வலியுறுத்தப்படுகிறது. கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் பன்றிக் கொழுப்பு தடவப்பட்ட குண்டுகள் வழங்கப்பட்டதால் அவற்றை துப்பாக்கியில் போடும்போது வாயால் கடித்துத் திறக்கும் ஆதிக்க ஜாதி சிப்பாய்களின் நாவில் மாமிசம் படிகிறது என்று பரவிய வதந்தி சிப்பாய் கலகம் துவங்கப்பட காரணம் என்று கருதப்படுகிறது. அதுபோல ஒரு பதற்றத்தை லட்டு தயாரிக்கும் நெய்யில் கலந்திருந்த மாமிச கொழுப்பு புனிதமற்றது, பார்ப்பனீய இந்து மத கோயிலை களங்கப்படுத்தி விட்டது என்ற பிரச்சாரத்தின் மூலம் மேற்கொள்கின்றனர்.
இந்துக்களில் பெரும்பாலோர் மாமிசம் உண்பவர்கள் என்பவர்கள் என்பது வெளிப்படையானது. ஆதிக்க ஜாதியினரான பார்ப்பனரும் அவர்களை பின்பற்றும் சில மேட்டுக்குடியினரும் மாமிசம் சாப்பிடுவதில்லை. ஆனால், பெரும்பாலான மக்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள் எனலாம். கணிசமான மக்கள் ஏறக்குறைய 15% பேர், மாட்டிறைச்சி உண்பவர்கள் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, மிருகக் கொழுப்பு நெய்யில் கலந்திருப்பது இவர்களைப் பொறுத்தவரை புனிதத்தை பாதித்திருப்பதாக கருத வேண்டிய தேவையில்லை.
தெய்வங்களைப் பொறுத்தவரை, பெரும்பாலான கிராம தெய்வங்களுக்கு ஆடு, கோழிகளை பலியிடுவது என்பது இந்தியாவில் பரவலாக உள்ளது. கடவுள்கள் மாமிச உணவு சாப்பிடுவது என்பது இந்து மதத்திற்கு எதிரானது அல்ல. மேலும், இந்துக்களின் புனித நூலான ரிக் வேதத்தில் தெய்வங்களுக்காக ஆடு, மாடுகளை பலியிடுவது பல இடங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாகங்களில் நெருப்பில் கால்நடைகளை வெட்டிப் போடுவது பரவலான வேத கால நடைமுறை. வேதங்களை பாடியவர்களை அந்த மாமிசத்தை அவர்களும் உண்பதாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.
வேதங்களை புனித நூல்கள் என்றுதான் இன்றுவரை கூறுகின்றனர். அந்த வேதங்களில் கடவுளுக்கு ஆடு மாடுகளை பலியிடுவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது நெய்யில் சிறிதளவு மிருகக் கொழுப்பு கலந்திருப்பதால் ஆலயத்தின் புனிதம் கெட்டுப்போய்விடும் என்பது பொருத்தமானதாக இல்லை. ஒன்று ரிக் வேதம் புனிதமற்றது என்று நிராகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் தெய்வங்களுக்கு மாமிச கொழுப்பால் புனிதம் கெட்டுவிடாது என்பதை ஏற்க வேண்டும். மிருகக் கொழுப்பை புனிதமற்றதாகக் கூறுவது இடைக்காலத்தில் உருவான ஜாதீய மன நிலையின் வெளிப்பாடாகவே இருக்கிறது.
பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிடாதவர்கள்; எனவே புனிதமானவர்கள். மாமிசம் சாப்பிடும் ஜாதியினர் அவர்களைவிட தாழ்வானவர்கள் என்பது ஜாதீய சமூகத்தின் மனோவியலாக கடந்த பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. வேதங்களை பலரும் படிப்பதில்லை என்பதால், அதில் மாமிசம் புனிதமாக உள்ளது மறக்கப்பட்டுவிட்டது. அதனால் மாமிசம் சாப்பிடுபவர்கள்கூட, புனிதமான நாட்களில் மாமிசத்தைத் தவிர்ப்பது வழக்கமாக உள்ளது. மாமிசம் உண்பதைக் குறித்த குற்ற உணர்வு ஒரு கலாச்சாரக் கூறாக இந்திய சமூகங்களில் பரவியுள்ளது பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.
இந்தப் பின்னணியில்தான் திருப்பதி பிரசாத லட்டுகள் மிருகக் கொழுப்பு கலந்து தயாரிக்கப்பட்டன என்ற வதந்தியை உருவாக்குவதன் மூலம் கிறிஸ்துவரான ஜெகன் ரெட்டியை இந்துக்களின் எதிரியாகக் கட்டமைக்க சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் முனைகின்றனர் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், அவர்கள் அறியாமலேயே செய்யும் பிழை என்னவென்றால் திருப்பதி கோயிலின் லட்டுகள் மீது பக்தர்களிடையே பெரும் ஐயத்தை உருவாக்குகின்றனர். அது அவர்களுக்கே எதிராக திரும்புவதற்கான வாய்ப்பும் உள்ளது.
ஏற்கனவே, சந்திரபாபு நாயுடு ஆட்சியில் திருப்பதி கோயிலில் உள்ள நகைகள், குறிப்பாக அரிய வகை வைரங்கள் காணாமல் போயிருப்பதாகவும், அவை வெளிநாட்டில் ஏலம் விடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. திருப்பதி கோயிலின் பரம்பரை அர்ச்சகரே இந்தக் குற்றச்சாட்டினை வைத்துள்ளார். சன் நியூஸ் தொலைக்காட்சியில் அவர் நேர்காணல் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இதையெல்லாம் இணைத்துக் காணும்போது இந்த மலினமான மதவெறி அரசியலை மேற்கொள்ளாமல் இருப்பதே சந்திரபாபு நாயுடுவுக்கு நல்லது என்று தோன்றுகிறது.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசியல் தத்துவத்தில் புதுப்பாதை அமைத்த அறிஞர் அண்ணா
பிறப்பே தண்டனையா? திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவப் போராட்டம்!
உள் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பும், தலித் அரசியலும், பொது சமூகமும்
118 ஏக்கர் பரப்பளவில்… பசுமை பூங்கவாக மாறும் சென்னை கிண்டி ரேஸ் கிளப்!
செஸ் ஒலிம்பியாட் : முதல்முறையாக இந்தியா தங்கம் வென்று அசத்தல்!
வரலாற்று வெற்றி: இலங்கையின் 9வது அதிபராகிறார் அநுர குமார திஸாநாயக்க