122 ஆண்டுகளில் இல்லாத மழை பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகள் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள நீர் வீடுகளில் புகுந்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் சீர்காழியில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிடுமாறு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இருவரும் இன்று (நவம்பர் 13) ஆய்வு மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, எடமணல் 33/11 கே.வி துணை மின் நிலையம், திருவெண்காடு,பாபுஜி நகர், மணி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர்கள், நிவாரண உதவிகளையும் வழங்கினர். இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீர்செல்வம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
ஆய்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “ மின் இணைப்பு பாதிப்பைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதியில் ஏறத்தாழ 3000 மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன.
பழுதடைந்த 472 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 350 இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டுள்ளன. மழை வருவதற்கு முன்பாக இந்த பகுதியில் மட்டும், 6943 பணிகளை மின் வாரியம் மேற்கொண்டது” என்றார்.

மின்மாற்றியை மாற்றுவதற்கு மின்சார ஊழியர்கள் விவசாயிகளிடம் பணம் வாங்குகின்றனர் என்று விவசாயிகள் கூறுகின்றனரே என்ற கேள்விக்கு, “அதுமாதிரி எந்தவிதமான பணமும் வசூலிக்கப்படவில்லை. இதுபோன்ற புகார் இன்றுதான் என் காதுக்கு வருகிறது. இந்த புகார் சரியானதாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த மழையிலும் மின்சார ஊழியர்கள் சிறப்பாக செயலாற்றிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்த அவர், “முதல்வர் ஸ்டாலின் காலை 6 மணிக்கு என்னிடமும், சுற்றுச்சூழல் அமைச்சரிடமும் பேசினார். என்ன பணிகள் நடந்து கொண்டிருக்கிறது, எவ்வளவு பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டிருக்கிறது என கள நிலவரத்தைக் கேட்டறிந்து இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்ற உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
122 வருடத்துக்குப் பிறகு இவ்வளவு மழை பெய்துள்ளது. பாதிப்புகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்று இரவுக்குள் அனைத்து இடங்களிலும் மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரவுக்குள் சரி செய்யப்படவில்லை எனில் நாளை என்னைக் கேட்கலாம். கஜா புயலின் போது 22 நாட்கள் கழித்து சப்ளை கொடுக்கப்பட்டதையும், இப்போது 24 மணி நேரத்தில் சப்ளை கொடுக்கப்படுவதையும் ஒப்பிட்டுப் பேச முடியாது” என குறிப்பிட்டார்.
அவரைத்தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், “இந்த மாவட்டம் முழுவதுமாக 35 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.
பிரியா
“எத்தகைய மழையையும் சமாளிக்க ரெடி” : மு.க.ஸ்டாலின்
“12 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்துவிட்டோம்”: அமித்ஷாவுக்கு பொன்முடி பதில்!