தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி இன்னும் சில நிமிடங்களில் இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அக்கட்சியின் உறுதிமொழி வெளியாகியுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை இன்று காலை 9.15 மணியளவில் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்த உள்ளார்.
விழா நடைபெறும் பகுதியில் கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ள நிலையில், விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் கழக கொடியேற்றி கட்சியினர் உறுதிமொழி ஏற்க உள்ள நிலையில் தற்போது அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது வெளியாகியுள்ளது.
அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை. சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.
மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2024 பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் சாதிக்குமா இந்தியா?