மீனவர்களை தாக்கிய இலங்கை நாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க,
கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து ஆறு மீனவர்கள் நாட்டுப் படகில் மீன் பிடிக்க சென்றிருந்த நிலையில்,
15ஆம் தேதி தோப்புத்துறைக்கு கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மூன்று படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை சூழ்ந்துகொண்டு,
அப்பாவி தமிழக மீனவர்களை இரும்பு கம்பி, கட்டை கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாகவும், இச்சம்பவத்தில் தமிழக மீனவர் ஒருவரின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயமும் 5 மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு தமிழ்நாட்டு மீனவர்களின் வாக்கிடாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி மற்றும் 200 கிலோ மீன் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இலங்கை நாட்டினர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும்,
காயமடைந்த மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் அடிக்கடி நடத்தப்படும் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,
மத்திய அரசு இதை கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் இது போன்ற வன்முறை செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்க,
இத்தகைய தாக்குதல் நடத்துவர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகன் என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50,000 ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கலை.ரா
உலக சாதனை படைத்த ஹர்மன்ப்ரீத்: ரோஹித்தின் சாதனையும் முறியடிப்பு!
மீண்டும் வந்த எய்ம்ஸ் செங்கல்: பாஜகவை கலாய்த்த அமைச்சர் உதயநிதி