தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவில்லை என்றால் மீனவர்களை ஒன்று திரட்டி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் மொட்டையடித்ததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே நேற்று (செப்டம்பர் 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் காசிநாத துரை, மாவட்டச் செயற்குழு கருணாகரன், தாலுகா செயலாளர் சிவா முன்னிலை வகித்தனர். இதில், மீனவ சங்கப் பிரதிநிதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “இலங்கை அரசு தமிழக மீனவர்களை தண்டனைக் கைதிகளாக மாற்றி, பெரும் தொகையை அபராதமாக விதித்து வருகிறது. அண்மையில் தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்து, தன்மானத்தை பறிக்கும் செயலிலும் ஈடுபட்டுள்ளது. இலங்கை அரசின் இத்தகைய அத்துமீறிய செயல்களை கண்டிக்காத பிரதமர் மோடி, உலகத்துக்கே சமாதானத்தை கொண்டு வருவதாகப் பேசி வருகிறார்.
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து நிவாரணத் தொகை வழங்கி வருகிறது. தமிழக முதல்வர், மீனவர்கள் பிரச்சினை குறித்து தொடர்ந்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால், மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.
எனவே, தமிழக மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி, இந்த விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசுமுன்வர வேண்டும். தவறும்பட்சத்தில், கடலோர மாவட்ட மீனவர்களை ஒன்றுதிரட்டி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்” என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: சமையலுக்கு ஏற்றது பெரிய வெங்காயமா? சின்ன வெங்காயமா?
மணிமேகலை யார்?: அப்டேட் குமாரு
கனமழைக்கு வாய்ப்பு : எந்தெந்த மாவட்டங்களில்?
இலங்கை அதிபர் தேர்தல் : நள்ளிரவு முதல் முடிவுகள்!