அம்மா முதல் அண்ணன் வரை… அதிமுகவின் ஒரே பெண் மாசெ ஜெயசுதா பேட்டி!

அரசியல்

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய  நிலையில்,  நாடு முழுவதும் வரவேற்பை பெற்று பேசு பொருளாக இருக்கிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் ஒரு பெண் மாவட்டச் செயலாளரை நியமித்திருப்பது வரவேற்பை பெற்று இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த கையோடு கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துகொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டு 75 ஆக இருந்த மாவட்டங்கள் தற்போது 82 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதில் திருவண்ணாமலையை கிழக்கு, மத்திய, தெற்கு, வடக்கு என நான்காக பிரித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதன்படி திருவண்ணாமலை மத்திய மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ ஜெயசுதாவை நியமித்துள்ளார்.

ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்தபோது தென்காசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் திருநெல்வேலி மாவட்ட செயலாளராக இருந்தார். ஆனால் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த இவர் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதல் பெண் மாவட்ட செயலாளராக ஜெயசுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ஜெயசுதா?

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிஏ பட்டதாரியான இவருக்கு 48 வயதாகிறது. இவரது கணவர் லட்சுமி காந்தன். இவரும் அதிமுகவில் செயல்பட்டு வருகிறார்.

ஜெயசுதா 2001ஆம் ஆண்டு முதல் அதிமுகவுக்காக பணியாற்றி வருகிறார். 2007ஆம் ஆண்டு போளூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்.

கட்சியில் இவரது செயல்பாட்டை கண்டு 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போளூர் தொகுதியில் போட்டியிட ஜெயசுதாவுக்கு வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா. அந்தத் தொகுதியில் இவரை எதிர்த்து பாமக வேட்பாளர் எதிரொலி மணியன் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் பாமக வேட்பாளரை காட்டிலும் 28,545 வாக்கு வித்தியாசத்தில், 92,391 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஜெயசுதாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் போளூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.எம்.முருகன் வெற்றி பெறவில்லை. திமுக வேட்பாளர் கே.வி. சேகரன் வெற்றி பெற்றார்.

2016 தேர்தலில் போட்டியிட ஜெயசுதாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது 2018ல் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து 2021 சட்டமன்ற தேர்தலில் போளூர் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கேட்டார் ஜெயசுதா.

ஆனால் அவருக்கு பதில் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வேட்பாளராக அதிமுக தலைமை நிறுத்தியது.

இது   போளூர் தொகுதி அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், “அக்னி கிருஷ்ணமூர்த்தி மீது உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கின் காரணமாக 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அவருக்கு ஜெயலலிதா வாய்ப்பு வழங்கவில்லை” என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்படி எதிர்ப்புக்கு மத்தியிலும் அக்னி கிருஷ்ணமூர்த்தி போட்டியிட்டு 43.57 சதவிகித வாக்குகளுடன்வெற்றி பெற்றார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயசுதாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு அக்னி கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது.

இந்த சூழலில் ஜெயசுதாவின் கணவர் லட்சுமி காந்தன் கட்சி தலைமையை அணுகி ஜெயசுதாவுக்கு போளூர் ஒன்றிய செயலாளர் பதவியை வாங்கி கொடுத்தார்.

தற்போது திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதாவை நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. திருவண்ணாமலை மத்திய மாவட்டத்திற்கு கீழ் ஆரணி மற்றும் போளூர் தொகுதிகள் வருகின்றன.

அக்னி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏவாக இருக்கும் போளூர் தொகுதிக்கும் இனி மாவட்ட செயலாளர் ஜெயசுதா தான்.

கட்சிக்குள் போட்டிகள் இருந்தாலும், தொடர்ந்து அதிமுகவுக்காக செயல்பட்டு வந்ததன் காரணமாக அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக திருவண்ணாமலை அதிமுகவினர் கூறுகிறார்கள்.

மா.செ.வாக நியமிக்கப்பட்டது குறித்து ஜெயசுதா நம்மிடம் கூறுகையில், “ கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாமல் அம்மாவின் பேச்சை கேட்டு மட்டுமே 2001 இலிருந்து கட்சிக்காக 6 வருடம் வேலை செய்தேன். 2007ல் போளூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளராக அம்மா என்னை நியமித்தார். 2018 ஆம் ஆண்டு என்னுடைய உழைப்புக்கு அங்கீகாரம் தரும் வகையில் போளூர் ஒன்றிய செயலாளராக என்னை நியமித்தார் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி.   அதன் பின் மாநில மகளிர் அணி துணை செயலாளராகவும் நியமித்தார் அண்ணன்.  இப்போது  என்னை மாவட்ட செயலாளராக நியமித்திருக்கிறார். அண்ணன்  தலைமையில் அதிமுக வலுவான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது” என்றார் ஜெயசுதா.

தமிழகத்தின் பெரிய  கட்சிகளில் ஒன்றான அதிமுகவில் மாவட்டச் செயலாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளீர்கள்.  ஓர் ஆண் மாசெ ஆக இருப்பதற்கும், ஒரு பெண் மாசெ ஆக இருப்பதற்கும் அரசியல் ரீதியாக ஏதும் சவால் இருப்பதாக உணர்கிறீர்களா?” என்று ஜெயசுதாவிடம் கேட்டோம்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. உழைப்புக்கு மரியாதை கிடைக்கிறது. ஆண் என்பதாலோ பெண் என்பதாலோ அல்ல.  அதிமுகவில் பெண்களுக்கு எப்போதுமே  முக்கியத்துவம் உண்டு. அது அண்ணன் எடப்பாடி  பழனிசாமி தலைமையிலும் தொடர்கிறது.  தைரியமாக செயல்படும்படி என்னை வாழ்த்தி அனுப்பி வைத்தார்” என்றார் ஜெயசுதா.

திமுகவின் பெண் மாவட்ட செயலாளர்கள்!

திமுகவைப் பொறுத்தவரை கரூர் திமுக மாவட்ட செயலாளராக வாசுகி முருகேசன் இருந்தார். அப்போது, அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜியை எதிர்த்து நேருக்கு நேர் அரசியல் செய்தவர். 2009 ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.
அதுபோன்று கோவை மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் விஜயலட்சுமி பழனிசாமி. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மனைவி. இவரும் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்து விட்டார்.

திமுக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளராக அங்கயற்கண்ணி இருந்தார். தற்போது அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 14 பெண் மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றனர். இந்த சூழலில் அதிமுகவிலும் பெண் மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேந்தன், பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அல்டிமேட் சவுண்ட் எபெக்டில் அட்டகாசமான எபிக்பூம் ஸ்பீக்கர்!

சசிகுமாரின் “எவிடன்ஸ்” : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மாதக் கடைசியில் பாக்கெட் காலியா..? ; உங்களுக்கான டிப்ஸ்!

விமர்சனம்: ஸ்கந்தா!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *