ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு : மோடி கண்டனம்!

அரசியல்

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்லோவாக்கியாவில் உள்ள ஹன்ட்லோவா நகரில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பிரதமர் ராபர்ட் ஃபிகோ. அங்கிருந்து கிளம்புவதற்காக வெளியே வந்தபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நபர் துப்பாக்கியை உயர்த்தி, பிரதமர் ஃபிகோவை ஐந்து முறை சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஸ்லோவாக்கியா பிரதமர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரதமரின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் நேற்று தகவல்கள் வெளியானது.

பிரதமர் ஃபிகோ ட்விட்டர் பக்கத்திலும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். ஹெலிகாப்டர் மூலமாக பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மறுபக்கம் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து போலீசார் கஸ்டடியில் வைத்துள்ளனர்.

இது அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட படுகொலை முயற்சி என்று ஸ்லோவாக்கியா உள்துறை அமைச்சர் மாதுஸ் சுதாஜ் எஸ்தோக் தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதமர் ராபர்ட் ஃபிகோ அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருடைய உயிருக்கு ஆபத்து இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஸ்லோவாக்யா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? எதற்காக செய்தனர்? என எந்த தகவலையும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்,  ரஷ்ய அதிபர் புதின்,  ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன், செக் குடியரசு நாட்டின் பிரதமர் பீட்டர் ஃபியாலா, ருமேனிய பிரதமர் மார்செல் சியோலாகு, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இந்த தாக்குதலை கண்டிப்பதாக கூறியுள்ளனர்.

இந்திய பிரதமர் மோடி இன்று (மே 16) தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த கோழைத்தனமான, கொடூரமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ராபர்ட் ஃபிகோ விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஸ்லோவாக்யா மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கிங் சந்தானம், அனிமேஷன் பாகுபலி..! இந்த வாரம் தியேட்டர் – ஓடிடி படங்களின் பட்டியல் இதோ..!

அதிகாலை பயங்கரம் : லாரி – ஆம்னி – அரசு பேருந்து மோதி விபத்து – என்ன நடந்தது?

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *