FIR against udhayanidhi stalin

உதயநிதி ஸ்டாலின் மீது எஃப்.ஐ.ஆர்!

அரசியல்

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேச காவல் நிலையத்தில் நேற்று (செப்டம்பர் 6) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது தேசிய அளவில் பேசு பொருளானது.

உதயநிதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் உலா வந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் தமிழக பாஜக சார்பிலும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சனாதனம் குறித்து சர்ச்சையாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் ஹர்ஷ் குப்தா மற்றும் ராம்சிங் லோதி புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது கருத்தை ஆதரித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங் கார்கே மீதும் ராம்பூர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஐபிசி பிரிவு 295 ஏ (மத உணர்வுகளை புண்படுத்துதல்) மற்றும் 153 ஏ (மதங்களுக்கு இடையே பகைமையை உண்டாக்குவது) என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி அமைச்சராக இருப்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநரின் அனுமதி தேவை.

அதனால்தான் தமிழ்நாட்டில் பாஜக சார்பிலும், சுப்பிரமணிய சுவாமியும் ஆளுநரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினர்.

இந்த சூழலில் உத்திரப் பிரதேச மாநில காவல்துறை உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

முன்னதாக டெல்லி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வினித் ஜிண்டால் புகார் அளித்தார்.

ஆனால் இந்த புகாரின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

யுஎஸ் ஓபன் : அரையிறுதிக்கு முன்னேறிய போபண்ணா ஜோடி!

விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *