அரசியல் சாசனத்தை காப்பாற்ற விரும்பினால் பிரதமர் நரேந்திர மோடியை கொல்லுங்கள் என்று மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் துணை தலைவர் ராஜா படேரியா பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ காட்சியில் அவர் பேசும்போது, “பிரதமர் மோடி, மதம், ஜாதி, மொழி அடிப்படையில் மக்களை பிரிப்பார். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் உயிர்கள் ஆபத்தில் உள்ளது.
அரசியல் சாசனம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பிரதமர் மோடியை கொல்ல தயாராக இருங்கள். கொல்லுங்கள் என்பது தேர்தலில் தோற்கடியுங்கள் என்பதாகும்.
மகாத்மா காந்தியின் அகிம்சை சித்தாந்தத்தை நான் பின்பற்றுகிறேன். சிறுபான்மையினரை பாதுகாக்க பிரதமர் மோடியை தேர்தலில் தோற்கடிப்பது அவசியம்.” என்று பேசியுள்ளார்.
அவரது பேச்சை கண்டித்த பாஜக தலைவர்கள் பலரும் படேரியாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் உண்மையான உணர்வை அம்பலப்படுத்துகிறது என்று மத்திய பிரேதச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மரியாதைக்குரிய பிரதமர் மோடி மக்களின் இதயங்களில் வாழ்கிறார். அவர் நமது நாட்டினுடைய நம்பிக்கையின் மையமாக இருக்கிறார். தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரதமரை எதிர்கொள்ள முடியாது.
இதனால் அவரது கொலை குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியுள்ளார். இது பொறாமையின் உச்சம். காங்கிரசின் உண்மையான உணர்வுகள் வெளிப்பட்டுள்ளன. ஆனால் இதுபோன்ற விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம் அதன் கடமையை செய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் முக்கிய உத்தரவு!