சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பம்மனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புச்செழியன் . தொழில் தேடி மதுரைக்காக வந்தவர் தற்போது சினிமா பைனான்சியராக உள்ளார். மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகியாகவும் இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இவரது இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி திமுகவினர், அதிமுகவினர், திரை நட்சத்திரங்கள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது யார் இந்த அன்புச் செழியன் என தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார். இந்நிலையில் இன்று அவருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
சென்னையில் நுங்கம்பாக்கம் , திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளிலும் மதுரையில் அவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு செய்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை 5 மணி முதல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
2020ஆம் ஆண்டும் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.300 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா