வைஃபை ஆன் செய்ததும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான காட்சிகளும் செய்திகளும் இன்பாக்சில் வந்து விழுந்தன. Final vote account of Erode East
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் நேற்று (பிப்ரவரி 5) நடந்தது. இதில் 68% சதவிகித ஓட்டுகள் பதிவாகின. அதாவது ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
2023 ஆம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் பதிவாகின. அப்போது வாக்கு சதவிகிதம் 75 ஆக இருந்தது.
இந்த முறை திமுகவுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் இதர கட்சிகள் போட்டியிடவில்லை. நாம் தமிழர் கட்சி மட்டுமே திமுகவுக்கு எதிராக போட்டியிட்டது. இந்நிலையில் வாக்குப்பதிவு 7% சரிந்து 68 ஆக பதிவானது.
மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வைக்கப்பட்டிருந்தன. ஆயினும் திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களோடு நோட்டா குறிப்பிடப்பட்ட வாக்கு இயந்திரம் பக்கமும் கணிசமானோர் சென்றிருக்கிறார்கள். தேர்தல் தொடங்கிய சில மணி நேரங்களில் 14 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குச் சாதனங்கள் பழுதடைந்தன. இருப்பினும், அவை குறுகிய காலத்தில் சரி செய்யப்பட்டன.
என் ஓட்டு எங்கே? Final vote account of Erode East

வளையகார தெருவில் உள்ள வாக்குச் சாவடி எண் 168 இல் வாக்களிக்க வந்த ஃபரிதா பேகம் என்ற பெண், ‘நான் உள்ளே சென்றேன். என் ஸ்லிப், வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டினேன். ஆனால் என் ஓட்டை பர்தா போட்டு வந்த யாரோ போட்டுச் சென்றுவிட்டதாக அதிகாரி கூறினார். அந்த கையெழுத்தை காட்டுங்கள் என்று கேட்டேன். கூட்டமாக இருக்கிறது என சொல்லி அனுப்பிவிட்டார்கள். இதுகுறித்து நான் புகார் செய்வேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இதை அறிந்ததும், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியை ஆய்வு செய்து, “அதே பெயரில் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எனக்கு விளக்கினர். அந்தப் பெண்ணுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர். திமுக நிர்வாகிகள் எங்கள் வாக்குச்சாவடி முகவர்களை அச்சுறுத்துகின்றனர். சில வாக்குச்சாவடிகளில் திமுக நிர்வாகிகள் போலி வாக்குகளைப் பதிவு செய்ததாக புகார்கள் வந்துள்ளன. தேர்தல் ஆணையம் இது குறித்து விசாரிக்க வேண்டும்” என்றார்.
தேர்தல் முடியும் சில நிமிடங்களுக்கு முன்பு வீரப்பன் சத்திரம் வாக்குச் சாவடியில் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. திமுக கள்ள ஓட்டுப் போடுவதாக நாம் தமிழர் கட்சியினர் கூறினர்,.
நாம் தமிழர் கட்சியினர் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘மொத்தமுள்ள 237 வாக்குச் சாவடிகளில் பெரும்பாலானவற்றில் நாம் தமிழர் கட்சிக்கு பூத் ஏஜென்ட்டுகள் இல்லை. இதை திமுக கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்டது. அதிமுகவும் தேர்தலை புறக்கணித்ததால் திமுகவுக்கு வலிமையான எதிர்ப்பைக் காட்டும் யாரும் வாக்குச் சாவடியில் இல்லை.
தேர்தலுக்கு முதல் நாளே அதிகாரிகள் கொஞ்சம் லிபரலாக நடந்துகொள்ளுமாறு திமுகவிடம் இருந்து அறிவுறுத்தல் போய்விட்டது. அதனால் தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. எங்கள் கணக்குப்படி விடுபட்ட வாக்குகளை திமுகவினரே போட்டிருக்கிறார்கள். வெளியூரில் இருந்துகொண்டு தேர்தல் அன்று ஈரோட்டுக்கு வராதவர்களின் ஓட்டுகளை திமுகவினர் போட்டுவிட்டனர். எங்களால் முடிந்த அளவு எதிர்த்தோம். நாம் தமிழர் கட்சிக்கு கட்டமைப்பு பலம் வேண்டும் என்பதுதான் இந்தத் தேர்தலில் இருந்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடம்’ என்று புலம்புகிறார்கள்.
யார் யாருக்கு எவ்வளவு வாக்குகள்? Final vote account of Erode East

திமுக தரப்பில் இன்று காலை அமைச்சர் முத்துசாமி ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளோடு ஆலோசித்தார். ஒவ்வொரு பகுதியிலும் வாக்குப் பதிவு பற்றி விசாரித்தார். அப்போது அமைச்சர் முத்துசாமி, ‘மொத்தம் பதிவான ஓட்டுகள்ல 55% நமக்குதான் விழுந்திருக்கு. தலைவர்கிட்டையும் இதைத்தான் சொல்லியிருக்கேன். தலைவர்கிட்ட சொன்னதை விட அதிகமாக வரலாம், குறைஞ்சிடக் கூடாது. அதனாலதான் ரொம்ப டைட் டா கால்குலேட் பண்ணி சொல்லியிருக்கேன்’ என்று நிர்வாகிகளிடம் சொல்லியுள்ளார்.
இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கில் இருந்து ஓட்டுக் கணக்கு பற்றிய தகவல்கள் முதல்வருக்கு சென்றுள்ளன. அதில் பதிவான ஒரு லட்சத்து 54 ஆயிரம் ஓட்டுகளில் திமுகவுக்கு 105000 முதல் 1,10,000 வாக்குகள் என்றும் நாம் தமிழர் கட்சிக்கு 20, 000 முதல் 25, 000 வரை கிடைக்கலாம் என்றும், ஆச்சரியமாக நோட்டாவுக்கு 18, 000 முதல் 22, 000 வரை கிடைக்கக் கூடுமென்றும் அந்த கணக்குகள் சொல்கின்றன.
சித்தோடு பொறியியல் கல்லூரியில் ஓட்டுப் பெட்டிகள் இருக்கின்றன. பிப்ரவரி 8 காலை வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது மக்களின் முடிவுகள் தெரியும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப். Final vote account of Erode East