ஸ்டாலின் குடும்பம்: அமித் ஷாவிடம் எடப்பாடி கொடுத்த ஃபைல்!

அரசியல்

செப்டம்பர் 20 ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முடித்த பின் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது அவர், “நானும், வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் அமித் ஷா அவர்களை சந்தித்தோம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.

தமிழகத்தை பொறுத்தவரை 2 பிரதான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நான் முதல்-அமைச்சராக இருக்கும்போது பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

ஒன்று கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் தேவையான நீர் கிடைக்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான் முதல்-அமைச்சராக இருந்தபோது பல்வேறு முறை பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் கோரிக்கை வைத்தேன்.

இதையும் பரிசீலிப்பதாக சொன்னார். தற்போது அதை வேகப்படுத்தி துரிதப்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

இரண்டாவது கோரிக்கை என்னவென்றால்… அம்மாவின் அரசு இருந்தபோது பிரதமரிடம் ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற ஒரு திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

காவிரி நதியில் கலக்கின்ற மாசுபட்ட நீரை சுத்தம் செய்து காவிரியில் விடுவதற்காக இந்த திட்டம்.

இந்த திட்டம் இரு அவையின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையில் இடம் பெற்று அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தையும் வேகமாக, துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

அதோடு தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. தமிழகம் முழுவதும் தடையின்றி போதைப்பொருள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியக்கூடிய சூழ்நிலையை எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

இதை ஏற்கனவே நான் பலமுறை சட்டமன்றத்தில் பேசும்போது முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறேன். அறிக்கைகள் கொடுத்தோம். ஆனால் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

எனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம்” என்று கூறினார்.

ஆனால் அமித் ஷாவிடம் எடப்பாடி கொடுத்த ஆதாரங்களும் பேப்பர்களும் வேறு மாதிரியானவை என்கிறார்கள் டெல்லி சோர்ஸுகள்.

சமீபத்தில் மின் கட்டணத்தை எதிர்த்து செங்கல்பட்டில் அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டுக்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று ஆவேசமாக குற்றம் சாட்டினார்.

”தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. இப்போது தமிழகத்திற்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களது குடும்பம் அதிகார மையமாக மாறியுள்ளது.

முதல்வரின் மனைவி, மகன், மருமகன் தான் தமிழகத்தை ஆட்சி செய்கின்றனர். மு.க.ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலினும் பதில் அளித்தார்.

மாற்றுத் திறனாளிகள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 4 முதல்வர்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

வெறும் 4 முதல்வர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே” என்று கூறினார் ஸ்டாலின்.

கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய்க்கு பயணம் மேற்கொண்டார். அப்போது விருதுநகரில் ஆர்பாட்டத்தில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “துபாய்க்கு ஸ்டாலின் மட்டும் செல்லவில்லை, அவரோடு ஒரு குடும்பப் பட்டாளமே செல்கிறது.

முதல்வரின் துபாய் பயணத்தை ஒட்டி 5 ஆயிரம் கோடி ரூபாய் துபாய் பறந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன” என்று பரபரப்பாக பேசினார். இது அப்போது அரசியல் அரங்கில் சூடான விவாதங்களை ஏற்படுத்தியது.

அண்ணாமலை இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும், முதல்வரின் நிவாரண நிதிக்கு 100 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் ஆர்,எஸ்,பாரதி அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

அதன் பின் அண்ணாமலை இதை பெரிதாகக் கையிலெடுக்கவில்லை. ஆதாரங்களையும் கொடுக்கவில்லை.

இவ்வாறு இந்த திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே சபரீசனையும், உதயநிதி ஸ்டாலினையும் மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் புகார்களை எழுப்பிக் கொண்டே வருகிறார்கள்.

இந்த பின்னணியில்தான் அரசு நிர்வாகத்தில் தொடர்புகளும், அனுபவங்களும் பெற்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது சில தகவல்கள் அடங்கிய ஃபைலை அமித் ஷாவிடம் கொடுத்தார்.

அதில் தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோரின் செயல்பாடுகள் பற்றியும்,

திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை வருடங்களில் இவர்களின் பொருளாதார நெட்வொர்க் விரிவடைந்திருப்பது பற்றியும்,

வெளிநாடுகளில் இவர்களுக்கு தொடர்புகள் இருக்கிறது என்றும் ஒரு ரிப்போர்ட்டை அமித் ஷாவிடம் கொடுத்திருக்கிறார் எடப்பாடி.

’இந்த தகவல்களின் அடிப்படையிலும் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையிலும் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்தார் எடப்பாடி.

அப்படி நடவடிக்கை எடுத்தால் வரும் எம்பி தேர்தலில் நம் கூட்டணிக்கு இது அரசியல் ரீதியாக பலன் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார் எடப்பாடி.

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சிப் புள்ளிகள் பற்றிய எடப்பாடியின் ஃபைலை சீரியசாக பார்த்து எடுத்து வைத்துக் கொண்டார் அமித் ஷா.

அமித் ஷாவை எப்படி கவர்வது என்று திட்டம்போட்டு இந்த ஃபைலை தயாரித்து எடுத்துச் சென்று கொடுத்து அதன்படியே அமித் ஷாவின் புருவத்தை உயரவைத்துவிட்டார் எடப்பாடி என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

வேந்தன்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

சரவெடி சதம் அடித்த கவுர்: தொடரை கைப்பற்றிய இந்திய அணி!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.