”எங்கள் வலியை உணருங்கள்” : நெடுமாறன் பேட்டி பற்றி ஈழத் தமிழர்கள்

Published On:

| By Aara

பிரபாகரன் உயிரோடு நலமாக இருக்கிறார் என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் பேசிய பேச்சு உலகம் முழுதும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பல அரசியல் தலைவர்களும் இதுகுறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர். உலகின் பிற நாடுகளில் இருக்கும் தமிழர்களும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில்  இப்போதும் ஈழத்தில் வசிக்கும் தமிழர்கள் பழ. நெடுமாறனின் இந்த கூற்றை எப்படிப்  பார்க்கிறார்கள்?

யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஈழத் தமிழர்கள் சிலரிடம் பேசினோம்.

”எங்களை அழிப்பதும் எங்களை கேவலப்படுத்துவதும்தான் இந்திய அரசியலில் இருக்குது. இதைத்தான் பாத்துக் கொண்டிருக்கிறோம். தன்னுடைய பிழைப்புக்கு இப்படியான கதைகளை விட்டுக் கொண்டிருக்கு. சிரிக்கிறதா இல்ல கும்மிக் கொட்டுறதாண்டு  தெரியாம கதைத்துக் கொண்டிருக்கோம். மிகக் கேவலமான வேலை இது’ என்றனர்.

ஈழத் தமிழர்கள் இன்றும் இந்த நாள் வரையிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கூட வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி என்ற மாபெரும் போராட்டம் நடந்து வருகிறது.

வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தமிழர்களின் தாயகம் என்றும், ‘ அரசியல் கைதிகளை விடுதலை செய்’ என்றும்,   ‘தமிழரின்  தாயகம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து’ என்றும் முழக்கங்கள் எழுப்பி  போராட்டங்களும் பேரணிகளும் தமிழர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.  இப்படிப்பட்ட போராட்டங்களில் கிறிஸ்துவ குருமார்கள், இந்து குருக்கள்கள், முஸ்லிம் குருமார்கள் எல்லாரும் சேர்ந்து பங்கு பெறுகிறார்கள்.  

இந்நிலையில், ‘பிரபாகரன் இருக்கிறார்  அவர் வருவார்’ என்று சொல்வதன் மூலம் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் விவாதம் நடக்கலாம். ஆனால் இலங்கையில் மேலும் மேலும் தமிழர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டாக வேண்டும். எங்கள் நிதர்சன வலிகளை உணராதவர்களின் குரலாகவே இதைப் பார்க்கிறோம்” என்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.

-வேந்தன் 

”நான் அவன் இல்லை” கடுப்பான பிருத்வி ஷா

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ : கதையம்சம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share