தோல்வி பயத்தால் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி சிறுகனூரில் இன்று (மார்ச் 22) பெரம்பலூர் திமுக வேட்பாளரான அருண் நேரு, திருச்சி மதிமுக வேட்பாளரான துரை வைகோ ஆகியோருக்கு ஓட்டு கேட்டு பிரச்சார கூட்டம் நடந்தது.
இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.
“தேர்தல் என்பதால் பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இல்லையென்றால் வெளிநாட்டில்தான் இருப்பார்.
சமீபத்தில் சேலத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகிவிட்டதால் திமுகவுக்கு தூக்கம் வரவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
உண்மையில் தனது ஆட்சி முடியப்போகிறது என மோடிக்குதான் தூக்கம் வரவில்லை. தோல்வி பயம் அவரது கண்ணிலும், முகத்திலும் தெரிகிறது.
தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாரே, அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு அவர் பதில் சொன்னாரா?.
10 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார். தமிழ்நாட்டுக்கு என்ன சிறப்புத் திட்டம் செய்தார்? அவரால் சொல்ல முடியுமா?” என கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.
திமுக ஆட்சியில் இந்த 3 ஆண்டில் எத்தனை திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம், அதை சொன்னால் நேரம் போதாது என்று கூறிய ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகை, இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், இலவச பஸ், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதவித் தொகை ஆகிய திட்டங்களால் எத்தனை பேர் பயனடைந்திருக்கிறார்கள்” என பட்டியலிட்டார்.
எங்கே… எங்கே… எங்கே…
மாநிலத்தை ஆளும் நாங்கள் தாங்க முடியாத நிதி நெருக்கடியிலும், இவ்வளவு செய்திருக்கிறோம். ஆனால் நீங்கள் என்ன சிறப்புத் திட்டங்களை செய்திருக்கிறீர்கள்?, சென்னை, தூத்துக்குடி மழை பாதிப்புகளுக்கு ஏன் நிதி தரவில்லை? எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் கட்டவில்லை?. புதிய ரயில் திட்டம் எங்கே? ஒன்றிய அரசு பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஏன் முன்னுரிமை கொடுக்கவில்லை? என பிரதமரிடம் கேட்டால், எதற்காவது பதில் இருக்கிறதா?.
தமிழ் மொழியை புறக்கணித்ததை மறைக்க, தமிழ்நாட்டுக்கு முட்டுக்கட்டை போட்டதை மறைக்க தேவையில்லாததை பேசுகிறார்.
மக்களை எதிர்கொள்ள பயப்படக்கூடிய பாஜக, புலனாய்வு அமைப்புகள் மூலமாகவும், ஆளுநர் மூலமாகவும் எதிர்கொள்வது கோழைத்தனம்.
இவர்களது உருட்டல், மிரட்டல்களை மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். இது, இந்தியா கூட்டணிக்கும் பாஜகவுக்குமான யுத்தம் என்று நினைக்காதீர்கள். இந்திய மக்களுக்கும் பாஜகவுக்குமான யுத்தம்.
இந்த யுத்தத்தில் மக்கள்தான் வெற்றி பெறுவார்கள். பாஜக வேரோடு வீழ்த்தப்படும்.
மாண்புமிகு பிரதமர் அவர்களே, இந்தியா கூட்டணி வெற்றி என்று ஜூன் 4ஆம் தேதி வருகிற செய்தி உங்களது தூக்கத்தை தான் தொலைக்கப்போகிறது.
தமிழ்நாட்டுக்கு விரோதமாக எல்லாவற்றையும் செய்துவிட்டு தமிழ்தான் மூத்தமொழி என்று பிரதமர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். தமிழ் மொழி வளர்ச்சிக்கு நீங்கள் கொடுத்த நிதி எவ்வளவு என இங்கு வந்து உங்களால் சொல்ல முடியுமா?
தேர்தலுக்கு தேர்தல் கபட நாடகம் ஆடுகிறார். இனி தமிழ்நாட்டு மக்கள் அவரை மன்னிக்கமாட்டார்கள்.
பாஜகவின் இமாலய ஊழல்
10 ஆண்டுகாலம் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தியிருக்கிறோம் என்று மோடி சொல்கிறார். ஆனால் பாஜக செய்த இமாலய ஊழல் தான் தேர்தல் நிதி பத்திர திட்டம். இதன்மூலம் 8000 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கிறார்கள். வரலாற்றில் இப்படி ஒரு வசூல் நடந்தது இல்லை.
அதோடு சிஏஜி அறிக்கை மூலம் அவர்கள் பல்வேறு திட்டங்களில் 7 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது தெரியவந்தது.
அதுவும் பிஎம் ஃபண்ட்ஸ் கேர் என்ற பெயரிலும் ஊழல் செய்திருக்கிறார்கள். ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், இது அம்பலப்படுத்தப்படும். ரஃபேல் ஊழலும் வெளியே கொண்டுவரப்படும்.
பாஜக ஊழலை மறைக்க, தோல்வி பயத்தால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்திருக்கிறார்கள். கடந்த மாதம் ஜார்க்கண்ட் முதல்வர் கைது செய்யப்பட்டார்.
இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை. தனக்கு எதிராக வலிமையான இந்தியா கூட்டணியை அமைத்துவிட்டார்கள். மக்கள் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரள ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் பாஜக தலைமை தவறுக்கு மேல் தவறு செய்கிறது.
சர்வாதிகார பாஜகவை தமிழ்நாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டிக்கிறாரா?
சிஏஏ திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு இப்போது நடிக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி சம்பவம், கொடநாடு கொலை, கொள்ளை மர்மம் என அவரது ஆட்சியில் நடந்தவற்றை பட்டியலிடலாம்.
தமிழ்நாட்டுக்கு பாஜக செய்த அத்தனை துரோகங்களுக்கும் துணை நின்றவர் பழனிசாமி. இன்று பாஜகவோடு கள்ளக் கூட்டணி நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். அவரது நாடகம் விரைவில் முடிவுக்கு வரும்” என்று தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாய்க்கொழுப்பு… எதற்கு நிதியமைச்சர் பதவி?: நிர்மலா சீதாராமனை விளாசிய ஸ்டாலின்