ராஜன் குறை
மக்களாட்சி ஒரே நாளில் உருவாகவில்லை. அது வெகுகாலமாக அதிகாரக் குவிப்பிற்கும், அதிகார பகிர்விற்குமான இயங்கியலில் பரிணமித்தது.
அதிகாரப் பகிர்வு என்றால் கூட்டணி ஆட்சி என்பதல்ல. ஒரு நபரிடம் அதிகாரம் குவியக் கூடாது என்பதுதான். ஆனாலும் ஒரு முடிவு எடுக்க வேண்டுமென்றால் அது ஒற்றை முடிவாகத்தான் இருக்கும். அதனை இறுதியாக எடுத்துச் செயல்படுத்தும் பொறுப்பு ஒருவரிடம் கொடுக்கப்படும். அந்த முடிவை இறுதி செய்பவராக தலைவர் என்று ஒருவர் நாட்டிற்கும், அரசுக்கும், நிறுவனத்திற்கும், எந்தவொரு குழுவிற்கும், கட்சிகளுக்கும் தேவைப்படுவார். அப்படி ஒருவர் தலைவராக இருப்பது எதைக் குறிக்க வேண்டும் என்றால் அவர் தலைமை தாங்கும் அமைப்புக்குள் பல்வேறு பார்வைகளும், அணுகுமுறைகளும், பல்வேறு நலன்களும் இருக்கும், அவற்றிற்குள் விவாதங்கள் இருக்கும்; அந்த விவாதங்களில் பயன்பெற்று ஒரு முடிவை இறுதி செய்யத்தான் தலைவர் தேவை என்பது பொருளாகும்.
சுருங்கச் சொன்னால் அரசியல் கட்சிகளுக்குத் தலைவர் என்று ஒருவரை நியமிப்பது வசதி. அப்போதுதான் கட்சியிலுள்ள பல்வேறு தலைமைப் பண்பு கொண்டவர்களை, பல்வேறு மாறுபட்ட கருத்து நிலைகளை ஒருங்கிணைக்க முடியும். மக்களிடையே கட்சியின் ஒருமித்த முகமாக அவர் செயல்பட வேண்டும். அதனால் ஒவ்வொரு கட்சியும் சரியான தலைமை அமைய வேண்டும் என்று தேடுதலில் இருக்கும். பல சமயங்களில் அப்படி அமையும் தலைவர்கள் எதேச்சதிகாரமாக செயல்படத் துவங்குவதும் நடக்கும். அப்போது மெல்ல, மெல்ல கட்சியில் உற்சாகம் குன்றி, பிளவுகள் தலையெடுக்கும். மக்களிடையே அதன் செல்வாக்கு சரியும்.
இந்த வகையில் பொறுமையாக சிந்தித்தால் எந்த ஒரு நிறுவனமோ, அமைப்போ, கட்சியோ வலிமை பெறுவது என்பது எந்த அளவு பல்வேறு கருத்துநிலைகளின் விவாதத்திற்கு அது இடம் தருகிறது, எப்படி பல்வேறு அங்கங்களின் தேவைகளை, கோரிக்கைகளை மதித்து நடக்கிறது என்பதனையெல்லாம் பொறுத்துத்தான் அமையும். ஒற்றைத் தலைவரிடம் அதிகாரம் குவிவது குறுகிய காலத்திற்கு பலன் தரலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் அது பெரும் பலவீனத்திற்கே இட்டுச் செல்லும்.
அரசியல் கட்சி எப்படி உருவாக வேண்டும்?
ஒரு அரசியல் கட்சி கட்டடம் கட்டுவது போல முதலில் அஸ்திவாரம் இட்டு, அதன் மேல் செங்கல்களை வைத்துக் கட்டி, சிமென்ட் பூசி, கான்கிரீட் உறுதிப்பாடு தேவையென்றால் அதனையும் அமைத்து, ஒவ்வொரு தளமாக உருவாக்கிச் செல்ல வேண்டும். கட்சியின் அஸ்திவாரம் என்பதை வேர்மட்டம் என்றும் ஆங்கிலத்தில் கிராஸ் ரூட் என்றும் சொல்வார்கள். எந்த கட்சிகளெல்லாம் வலுவான வேர்மட்ட அமைப்புகளின் மூலம் வலுப்பெறுகிறதோ அந்த கட்சிகளே நீண்ட காலம் நிலைத்து நிற்கும். எந்த கட்சியிலாவது தலைமை வலுவாக இருந்தாலும் வேர்மட்ட அமைப்புகள் கலைந்து போனால் அந்த கட்சி தாக்குப் பிடிப்பது கடினம்.
உதாரணமாகச் சொன்னால் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு பெருமளவு சீர்குலைந்தது. பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி என்ற மும்முனைப் போட்டியில் பலரும் காங்கிரஸிலிருந்து உள்ளிழுக்கப்பட்டார்கள். இன்றைக்கு பிரியங்கா, ராகுல் காந்தி போன்ற துடிப்புமிக்க தலைவர்கள் அங்கே இயங்கினாலும், கட்சி அமைப்பு சீர்குலைந்ததால் காங்கிரஸ் அங்கே காலூன்றுவது கடினமாகவே உள்ளது. வேறு பல மாநிலங்களிலும் காங்கிரஸ் இத்தகைய கட்டுமானச் சரிவை சந்தித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்று சிறப்பு என்னவென்றால் மிக வலுவான வேர்மட்ட அமைப்புகளை அது உருவாக்கியதுதான். ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் தேநீர் கடைகளிலும், சலூன் கடைகளிலும், லாண்டரி கடைகளிலும், சைக்கிள் கடைகளிலும், கட்சிக் கிளைகளிலும், திருவள்ளுவர் மன்றங்களிலும் பலர் கூடி கட்சி ஏடுகளை வாசித்தார்கள். விவாதித்தார்கள். கட்சிக்கு என்று பெரும் லட்சியங்களும், கொள்கை, கோட்பாடுகளும் இருந்தன. தமிழ் மொழியின் பண்பாட்டுச் செழுமையினை அவர்கள் உரமாக்கிக் கொண்டார்கள். ஒரு புதிய அரசியல் சொல்லாடலை உருவாக்கினார்கள்.
அந்த வேர்கள் சமூக உளவியலில் ஆழமாகப் பற்றிப் பரவின. கவிதைகளாக, நாடகமாக, இலக்கியமாக அது பெரும் வீச்சினைக் கொண்டன. எங்களுடைய தி.மு.க துவக்க கால வரலாறு குறித்த Rule of the Commoner நூலில் காவியப் பாவலர் பண்ணன் என்ற உடுமலை நகர கிளை உறுப்பினரின் அனுபவப் பதிவுகளைக் கூறியுள்ளோம். அவருடைய வழிகாட்டியாக விளங்கிய பா.நாராயணன் அவரை கட்சி வேலைகளை நிறுத்திவிட்டு ஆனந்த விகடன் அறிவித்த இலக்கிய போட்டிக்கு நாடகம் எழுதி அனுப்பச் சொன்னதை விவரித்திருப்பார். அதற்காக கட்சி அனுதாபி ஒருவரிடம் சொல்லி அவரது தோட்டத்து வீட்டில் தங்கி முழு மூச்சாக எழுத வசதி செய்து தருகிறார். இப்படி ஆயிரம் பூக்களாக மலர்ந்த கட்சியைத்தான் சினிமா நடிகர்களால் வளர்ந்த கட்சி என்று ஒற்றைப் பரிமாணமாக பலர் புரிந்து கொள்கிறார்கள்.
அந்த சினிமா நடிகர்களின் காலத்தையெல்லாம் கடந்து நின்று இன்றும் இந்திய அளவில் திராவிட கருத்தியலை உயர்த்திப் பிடித்து சமூக நீதிக்கும், கூட்டாட்சிக்கும் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என்றால் எந்த அளவு அதன் வேர்கள் சமூகத்தில் பரவியுள்ளன என்பதை யாரும் சிந்தித்துப் பார்க்கலாம். வெறும் தேர்தல்களில் வெல்லும் சூத்திரம் அல்ல இது. மக்களாட்சி தத்துவம் என்ற மாபெரும் கனவு.
அடித்தளம் இல்லாத கட்டடங்கள்
ஊடகங்கள் பெருகப் பெருக, மக்களிடையே நன்கு அறிமுகமான ஒருவர் அவருடைய பிரபலத்தை முதலீடாக வைத்து கட்சி துவங்கிவிடலாம் என்று நினைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளிலும் ஊடகப் பிரபலங்கள் எதேச்சதிகார போக்கு கொண்ட தலைவர்களாக மாறுகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றால் பிரபலமானவர்தான். இவர் அதிபராக இருக்கும்போது யார் அறிவுரையையும் மதிக்காமல் முடிவுகள் எடுக்க முனைந்தவர், பாசிஸ்ட் என்று அவரிடம் பணியாற்றிய முக்கிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பாசிசம் என்பது தலைவரே கட்சி, ஆட்சி என்னும் நிலைதான். ஃபியூரர் கல்ச்சர் என்பார்கள். பெரும்பாலும் தன் பிரபலத்தை மட்டும் நம்பி கட்சி துவங்குபவர்கள் என்ன சொல்வார்கள் என்றால் நீங்கள் அனைவரும் சேர்ந்தவன்தான் நான் என்பார்கள். கர்ணன் படப் பாடலில் கிருஷ்ணன் பாடுவது போல “மன்னனும் நானே, மக்களும் நானே, மரம் செடி கொடிகளும் நானே” என்று கூறுவார்கள்.
நாமெல்லாம் ஒன்றுபட்ட சக்தி என்று சொல்லும்போது அதுதான் பாசிசம் என்பதை உணர மாட்டார்கள். கட்சி என்றால் அதில் பல அடுக்குகளில் பொறுப்புகள் இருக்க வேண்டும். அந்த பொறுப்புகளை வகிப்பவர்களை தலைமை மதித்து மக்கள் மத்தியில் எடுத்துக் கூற வேண்டும். அதன் பொருட்டுத்தான் மேடையில் பேசும்போது ஒவ்வொருவரின் பேரையும் கூறி “அவர்களே” என்று கூறுகிறார்கள். அதுதான் மக்களாட்சி பாயசம். அது ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் இயல்பிலேயே பாசிச மோகம் கொண்டுள்ளார் என்பது தெளிவு.
பெரும்பாலும் திரைப்பட நடிகர்கள் தமிழ்நாட்டில் கட்சி துவங்கும்போது இதுதான் நிகழ்கிறது. அவர்கள் ஒருவரை மட்டுமே, அவர்கள் பிரபலத்தை மட்டுமே முதலீடாக வைத்து கட்சி துவங்கப்படுகிறது. அவர் ஏதேதோ கொள்கைகளை எழுதி வைத்துப் படிக்கலாம். ஆனால் அவற்றை வடிவமைத்த கட்சி அமைப்பு எது. உயர்நிலைக் குழு எது, பொதுக்குழு எது என்றெல்லாம் தெரிய வேண்டும். அவர்களெல்லாரும் அந்தக் கொள்கைகளைப் பற்றிப் பேச வேண்டும்.
நடிகர் விஜயகாந்த் மதுரையில் கட்சி துவங்கியபோது நடத்திய மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது ஆய்வு சார்ந்த களப்பணியில் இருந்ததால் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்த பாஸ் ஒன்றை நானும் பெற்றிருந்தேன். அதனால் விஜயகாந்த் கட்சி பெயரை அறிவித்தபோது மேடைக்கு வெகு அருகில் இருந்தேன். மக்கள் கூட்டம் அலைபோல மேடையை நோக்கி முண்டியபடி இருந்தது. முதல் நாளே பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு வளாகத்தில் குழுமியிருந்தார்கள். அவர்கள் பலருடன் உரையாடினேன். அவர்கள் அனைவரும் புதிய வரலாறு படைக்கப் போகிறோம், கேப்டனை முதல்வராக்கி தமிழ்நாட்டில் புதிய அரசியல் அத்தியாயம் துவங்கப் போகிறோம் என்று எழுச்சியுடன் பேசினார்கள். தூத்துக்குடியில் கலாசி வேலை செய்யும் ஒருவர் வட்டிக்கு ஐயாயிரம் கடன் வாங்கி மாநாட்டிற்கு நன்கொடை அளித்ததாகச் சொன்னார். நான் ஏன் என்று கேட்டேன். அப்போதுதான் மாநாட்டில் வாலண்டியராக சீருடையுடன் பங்கேற்க முடியும் என்று சொன்னார்.
உண்மையிலேயே பிரம்மாண்டமாக நடந்த அந்த மாநாடு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. பிரச்சினை என்னவென்றால் அவ்வளவு பெரிய கூட்டத்திடம் பேசுவதற்கு ஆட்கள் இல்லை. மேடையில் பலர் அமர்ந்து இருந்தார்கள். ஆனால் யாருமே சிறப்பாகப் பேசக் கூடியவராக, தலைமைப் பண்பு மிக்கவராக இல்லை. விஜயகாந்த் பேச்சு மட்டுமே முக்கியமானதாக இருந்தது. இன்றுவரை அவருடைய தே.மு.தி.க கட்சித் தலைவர் என்று யாரையும் அடையாளப்படுத்த முடியாது. விஜயகாந்த், அவர் மனைவி பிரேமலதா, மைத்துனர் சதீஷ், மகன் விஜய பிரபாகரன் என்பதைத் தாண்டி வேறு தலைவர்கள், சிந்தனையாளர்கள், நிர்வாகிகள் என்று எவர் பெயரையும் கூற முடியவில்லை. அப்படி ஒரு கட்சி தேய்ந்து வலுவிழக்காமல் என்ன ஆகும்?
பல கட்சிகளிலும் இந்த நிலைதான். கட்சியின் தலைவர் இவர் என்று இல்லாமல், இவருடைய கட்சி இது என்று சொல்லும்படியாகத்தான் இருக்கிறது. தலைவருக்காகக் கட்சிதானே தவிர, கட்சிக்காகத் தலைவர் இல்லை. இந்த நிலையில் கட்சி துவங்குவது என்பது மக்களாட்சி தத்துவத்திற்கே விரோதமானது. இந்த செல்வாக்குள்ள நபர்கள் தங்களைத் தவிர கட்சியில் வேறு யாரும் பெயர் பெறுவதையும் விரும்புவதில்லை. மேடையில் கட்சி பொறுப்பாளர்களின் பெயர்களைக் கூறுவதையும், கண்ணியமாக “அவர்களே” என்ற பின்னொட்டுடன் அவர்களை அழைப்பதையும்கூட தேவையற்ற நாடகமாக கேலி செய்யும் அளவிற்குத்தான் மக்களாட்சி குறித்த புரிதல் உள்ளது.
கலைஞர் ஒருமுறை எழுதினார். அடுக்குமொழியாகப் பேசுகிறேன் என்று சிலர் தானே சூடுபோட்டுக் கொள்கிறார்கள் என்றார். அவர் சுட்டிக்காட்டிய உதாரணம் மாற்றுக் கட்சிக்காரர் எழுதிய அடுக்குமொழி வசனம். “சர்பத்தையும் (பாம்பு) சாம்பார் வைத்து சாப்பிட்டுவிடுவேன்” என்று எழுதினாராம் அவர். அது போல பெரும் கூட்டத்தைக் கூட்டி தான் மட்டுமே பேசி அனுப்பிவைத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் “பாசிசம் பாசிசம் என்கிறார்களே, இவர்கள் மட்டுமென்ன பாயசமா?” என்று கேட்டுள்ளார்.
அவர் மக்களாட்சி என்பது பாயசம்தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடெங்கும் சாமானிய மக்களுக்கு அரசியல் உணர்வூட்டி, பேச்சுப் பயிற்சி கொடுத்து, சிந்தனைத் தெளிவு கொடுத்து தலைவர்களாக்கிய மாபெரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். தானொருவன் பேசினாலே மாநாடு என்று நினைக்கும் விஜய், பாசிசம் என்றால் என்னவென்று முதலில் படித்தறிய வேண்டும். தலைமைக்காக கட்சி என்பதே பாசிச வடிவம்தான் என்பதை உணர வேண்டும். முதலில் உங்கள் கட்சி நிர்வாகிகளை மதியுங்கள். அவர்களே கட்சி என உணரச் செய்யுங்கள். கதாநாயக சினிமாவில் நீங்களே திரைப்படமாக விளங்கியதுபோல, கட்சியிலும் நீங்களே கட்சியாக இருக்க முடியாது.
உண்மையில் நல்ல சினிமா என்பது என்னவென்று தெரிந்தவர்களுக்கு கதாநாயக சினிமாவே பாசிசத் தன்மையுள்ளது என்பது புரியும். அந்த சினிமா பிரபலத்தை வைத்துக்கொண்டு கட்சி துவங்குவது மட்டுமல்லாமல் “பாசிசம், பாயசம்” என்ற கிண்டல் வேறு. குறைந்தபட்சம் விஜய் அவர் சக நடிகர் பிரகாஷ் ராஜிடம் கேட்டுப் பார்க்கட்டும். கெளரி லங்கேஷ் உயிரைக் குடித்த பாசிசம் பற்றி சொல்லித் தருவார் அல்லது சத்யராஜிடம் கேட்டுப் பார்க்கட்டும். “மணியாட்டுபவர்கள்” உருவாக்கிய சமூகம் பற்றி சொல்லித் தருவார். பெரியார் என்பது கடவுள் மறுப்பு மட்டும் அல்லதான். ஆனால், பார்ப்பனீய சமூக அமைப்பை வாழ்நாள் முழுவதும் சாடியவர். அந்த ஒரு வார்த்தையை, பார்ப்பனீயம் என்ற வார்த்தையை, சொல்ல முடியாவிட்டால் அவர் பெயரை சொல்லும் அருகதை ஒருவருக்கு இருக்க முடியாது.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆரியம் ஏன் இன்று “தமிழ் வேண்டும், திராவிடம் வேண்டாம்” என்று சொல்கிறது?
‘திராவிட நல் திருநாடு’: கவனச் சிதறலும் கவனமிகு தொடர்ச்சியும்!
இஸ்ரேலின் அத்துமீறல்: இந்திய அரசு கண்டிக்கத் தயங்குவது ஏன்?
அமெரிக்க அதிபர் தேர்தலும், உலக அரசியல் சூழலும்: தமிழர்கள் அறிய வேண்டியவை என்ன?
மாநாடா படம் ரிவ்யூவா? – அப்டேட் குமாரு