Farmers union discussion with central government

விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை!

அரசியல்

விவசாய அமைப்புகளுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா, நித்யானந்த் ராய் ஆகியோர் இன்று (பிப்ரவரி 15) பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் டெல்லியில் பிப்ரவரி 13-ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஹரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி டிராக்டரில் விவசாயிகள் படையெடுத்தனர். விவசாயிகள் போராட்டம் அறிவிப்பால் டெல்லியின் அனைத்து நுழைவு வாயில்களும் தடுப்புகள், முள் வேலிகள் கொண்டு மூடப்பட்டன. போலீசார், துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.

டெல்லி, ஹரியானா எல்லைப்பகுதியான ஷிம்பு கிராமத்தில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீசினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இரண்டாவது நாளாகவும் விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டு வீசினர்.

விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, பஞ்சாப் மாநிலத்தில் இன்று பாரதிய கிசான் விவசாய அமைப்பு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடபட உள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்தை கைவிடவும் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா நேற்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் மத்திய அரசின் அழைப்பை ஏற்று, விவசாய அமைப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா, நித்யானந்த் ராய் ஆகியோர் இன்று சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

கடந்த இரண்டு முறை மத்திய அரசுடன் விவசாய அமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தையானது தோல்வியில் முடிந்த நிலையில், இன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வீராணம் ஏரியின் நீர் மட்டம்: சென்னைக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்?

தேர்தல் பத்திரம் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0