உரம் மற்றும் இடுபொருள் விற்பனையாளர்கள், அவர்களிடம் உரம் வாங்க வரும் விவசாயிகளை, இணை இடுபொருட்களையும் வாங்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
கடலூரில் உரம் வாங்க வரும் விவசாயிகளை, இயற்கை உரம் என்ற பெயரில் சில பொருட்களை வாங்குமாறு உர விற்பனையாளர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று மார்ச் 28, 2022 அன்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டிலிருந்தார். ஆனால், மின்னம்பலத்தில் செய்தி வெளியாகி ஒன்றரை மணி நேரத்தில், முதல்வர் அலுவலகத்தில் இருந்து அப்போதைய வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி ஐஏஎஸ் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு, மின்னம்பலம் செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு களத்தில் இறங்கி ஆய்வு செய்த வேளாண் துறை அதிகாரிகள், கடலூரில் பாதிக்கப்பட்ட விவசாயி ஜானகியிடம் விசாரணை மேற்கொண்டனர். இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையின் முடிவில், இனி இதுபோல் விவசாயிகளைக் கட்டாயப்படுத்தி இயற்கை உரம் மற்றும் இணை இடுபொருட்கள் வாங்கவைக்கும் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போதும், உர விற்பனையாளர்கள் எங்களை இணை இடுபொருட்களை வாங்குமாறு கட்டாயப் படுத்துகிறார்கள் என்று விவசாயிகள் வேளாண் துறையிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, நேற்று வேளாண்மை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் அனைத்து பயிர்களுக்கும் தேவையான உர இருப்பு மற்றும் விற்பனை குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவசாயிகள் இணை இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தப்படுவது பற்றியும் விசாரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உரம் மற்றும் இடுபொருள் விற்பனையாளர்கள், அவர்களிடம் உரம் வாங்க வரும் விவசாயிகளை, இணை இடுபொருட்களையும் வாங்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆய்வுக்கூட்டத்தின் போது யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மற்றும் இதர உரங்களின் தேவை மற்றும் சம்பா பருவத்திற்குத் தேவையான கையிருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு தற்போதைய உர இருப்பு தேவையைவிட அதிகமாக அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
போதுமான உர இருப்பு இருந்த போதிலும், வேளாண் விற்பனையாளர்கள் கூடுதலாக இணை இடுபொருட்களை, விவசாயிகளிடம் வாங்குவதற்குக் கட்டாயப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளிடமிருந்து கோரிக்கை பெறப்பட்டது.
விவசாயிகளுக்கு உர விற்பனை செய்யும் போது இணை இடுபொருட்களை வாங்கக் கட்டாயப்படுத்தக் கூடாது எனக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
அவ்வாறு விவசாயிகள் விரும்பாத இடுபொருள்களை வாங்க வலியுறுத்தும் உர விற்பனையாளர்கள், இடுபொருள் விற்பனையாளர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டது.
இதனை மீறும் உர விற்பனையாளர்கள் மற்றும் வேளாண் இடுபொருள் விற்பனை மையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், தேவைப்படும் நிகழ்வில் உரிமத்தை ரத்து செய்யவும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
வேளாண்மை உதவி அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு உரப்பயன்பாடு குறித்தும் மண்ணின் வளத்தைப் பாதுகாத்திடவும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
மேலும், மாவட்ட அலுவலர்கள் பருவத்திற்குத் தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், தரமான உரங்கள் வினியோகம் செய்வதையும் உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் விலை : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
செப்டம்பர் 11 தாக்குதல்: சாகும் தருவாயில் எடுக்கப்பட்ட படம்… வைரலாக காரணம்?
மக்களே உஷார்! – சுட்டெரிக்கும் சூரியன்… வானிலை மையம் வார்னிங்!