வைஃபை ஆன் செய்ததும் ஃபேஸ்புக் மெசஞ்சர் நோட்டிபிகேஷன்ஸ் காட்டியது. “ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்த இப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டிருக்கும் ஃபரிதா குரூப் ஆஃப் கம்பெனியை டார்கெட் வைத்து ஆகஸ்டு 23, 24 இரு தினங்களிலும் மத்திய அரசின் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருக்கிறதே?” என்று கேட்டது மெசஞ்சர்.
இதற்கு பதிலளித்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
”புகழ்பெற்ற தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனமான ஃப்ரிதா குரூப் காலணிகள், தோல் பைகள், கையுறைகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் டர்ன் ஓவர் செய்யும் இந்நிறுவனம் வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சில புகார்கள் சென்றிருக்கின்றன.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக ஆகஸ்டு 23 காலை கே.எச். குழுமம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஃபரிதா லெதர் தயாரிப்புகள் குழுமத்தைச் சேர்ந்த 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி, சென்னையில் நுங்கம்பாக்கம், ராமாபுரம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஆம்பூரில் ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளில் 2வது நாளும் தமிழகம் முழுவதும் 60 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனைக்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கிறது என்கிறார்கள் வேலூர் வட்டாரத்தில்.
ஃபரிதா குரூப் என்ற மிகப் பெரிய குழுமத்தின் தலைவராக இருப்பவர் ரஃபீக் அகமது மக்கா. ஆனால் இவரை வேலூர் வட்டாரத்தில் பரிதா பாபு என்றால்தான் தெரியும். பாபு என்றால் முஸ்லிம்களை மரியாதைக்குரிய வகையில் அழைக்கும் ஒரு பதமாக இங்கே பயன்படுத்தப்படுகிறது.
வேலூர் வட்டாரத்தின் அரசியல்வாதிகள் கூட ரெய்டுக்கு பிறகுதான் அட நம்ம ஃபரிதா பாபுவை டார்கெட் பண்ணி ரெய்டா என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஃபரிதா பாபு எனப்படும் ரபீக் அகமது மெக்கா, 1960 களில் இருந்தே தோல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த அரை நூற்றாண்டில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டு 12 நிறுவனங்களை துவக்கி உள்ளார். தொழில் வளர்ச்சிக்கு பாடுபட்டதாக 2011ல், பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
தென் இந்திய தொழில் வர்த்தக சபை தலைவராக இருந்த ஃபரிதா பாபு, தற்போது, அகில இந்திய தோல் பதனிடுவோர் மற்றும் வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். மத்திய தோல் ஆராய்ச்சி மற்றும் கவுன்சில் நிறுவன உறுப்பினராகவும் இருக்கிறார்.
மிகப்பெரிய தோல் தொழில் சாம்ராஜ்யத்தை படைத்து வைத்திருக்கும் ஃபரிதா குரூப்ஸின் மொத்த ஊழியர்களே சுமார் இருபதாயிரம் பேர் இருப்பார்கள். இந்த இருபதாயிரம் பேரின் குடும்பங்களும் கூட ஃபரிதா பாபுவின் பேச்சுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இந்த வகையில்தான், ஒரு குடும்பத்துக்கு நான்கு பேர் என்றால் கூட ஃபரிதா பாபுவின் பேச்சைக் கேட்க ஆம்பூர் வட்டாரத்தில் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.
மேலும் சமூக சேவை இயக்கத்தையும் நடத்தி வருகிறார் ஃபரிதா பாபு. இப்பகுதியில் இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை வெகு ஆண்டுகளாகவே செயல்படுத்தி வருகிறார். இப்பகுதியின் பொருளாதார வளம் மட்டுமல்ல இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் ஃபரிதா பாபுவின் ஏற்றுமதிக்கு குறிப்பிட்ட பங்குண்டு.
தனது இந்த செல்வாக்கால்தான் ஆம்பூர் நகராட்சித் தலைவர் உள்ளிட்ட இந்த வட்டாரத்தின் மக்கள் பிரதிநிதிகளை நிர்ணயிக்கும் பவர் ஃபரிதா பாபுவிடம் இருக்கிறது.
உதாரணத்துக்கு ஒரு சம்பவம் கடந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே நடந்தது. ஆம்பூர் திமுக நகர செயலாளர் ஆறுமுகம் நகராட்சி சேர்மனாக திமுக சார்பில் ஜெயித்த சபீர் அகமது என்பவரை தலைமைக்கு பரிந்துரைத்தார்.
ஆனால் முரசொலியில் ஆம்பூர் நகராட்சி தலைவருக்கான வேட்பாளர் ஏஜாஸ் அகமது என்று வெளியானது. இதைக் கண்ட நகர செயலாளர் ஆறுமுகம் கொதித்தெழுந்தார். காரணம் அந்த ஏஜாஸ் அகமது என்பவர் ஃபரிதா பாபு சுட்டிக் காட்டிய ஆள்.
ஆம்பூர் நகராட்சியில் எந்த கட்சி ஜெயித்தாலும் யார் சேர்மன் ஆவது என்பதை முடிவு செய்வது ஃபரிதா பாபுதான். அந்த அளவுக்கு அவருக்கு அனைத்துக் கட்சியிலும் செல்வாக்கு உள்ளது.
இந்த காரணத்தால்தான், ஃபரிதா பாபுவின் பரிந்துரையின் பேரில் ஏஜாஸ் அகமது ஆம்பூர் நகராட்சித் தலைவர் வேட்பாளராக திமுகவால் அறிவிக்கப்பட்டார். ஆனால் நகர செயலாளர் ஆறுமுகம் விடாப் பிடியாக தனது ஆதரவாளர் சபீர் அகமதுவை போட்டி வேட்பாளராக களமிறக்கினார்.
மேலும் தனது ஆதரவு கவுன்சிலர்களை பாதுகாப்பாக கொண்டு சென்று வைத்துவிட்டார். இதனால் நகராட்சித் தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக நகர செயலாளர் ஆறுமுகம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகனும், அமைச்சர் காந்தியும் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆறுமுகத்திடம், ‘போய் ஃபரிதா பாபுவை பாருய்யா’ என்கிறார்கள். ஆனால் அதற்கு ஆறுமுகம் மறுக்கிறார். பிறகு அவர்கள் இருவருமே ஆறுமுகத்தை ஆம்பூர் வர்த்தக மையத்துக்குகூட்டிப் போகிறார்கள். சமரசப் பேச்சுவார்த்தை நடக்கிறது.
அதாவது திமுகவின் நகராட்சித் தலைவர் யார் என்பதை ஃபரிதா பாபுவே முடிவு செய்கிறார். அங்கே நடந்த பேச்சுவார்த்தைப்படி ஆறுமுகத்தை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டு அவருக்கு துணை சேர்மன் பதவியும் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டு, சேர்மனாக ஏற்கனவே ஃபரிதா பாபு பரிந்துரைத்த ஏஜாஸ் அகமதுவே இருப்பார் என்று முடிவு செய்யப்படுகிறது.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய ஆறுமுகம் ஃபரிதா பாபுவின் கட்டுப்பாட்டுக்கு இணங்குகிறார். மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஃபரிதா பாபுவின் வேட்பாளர் ஏஜாஸ் நகராட்சித் தலைவராகிறார்.
ஆறுமுகம் துணைத் தலைவராகிவிட்டார். ஆம்பூர் வர்த்தக மையத்தில் ஃபரிதா பாபு பெரும் செல்வாக்கு பெற்றவர். ஆம்பூரில் மட்டுமல்ல சுற்று வட்டார நகராட்சிகளின் அரசியல் மையத்தை தீர்மானிப்பது ஆம்பூரின் அரசியல் மையம்தான்.
இந்த நிலையில்தான் நகராட்சித் தலைவர் தேர்தலில் நடந்த விஷயங்கள் உள்ளிட்ட மேலும் பல விஷயங்களை சேகரித்து வேலூர் மாவட்டத்தில் பாஜகவில் இருந்து வெளியேறிய ஒருவர் வெகு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.
‘ஆம்பூர் ஃபரிதா பாபுவின் ஷூவில்தான் இந்த வட்டார அரசியலே இருக்கிறது. அமைச்சர் துரைமுருகனே பரிதா பாபுவை முதலாளி என்றுதான் அழைப்பார். திமுக அமைச்சர்கள் சிலர் பரிதா நிறுவனத்தோடு மறைமுகமான தொழில் உறவுகளையும் கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கே பெரும் பேச்சாக இருக்கிறது.
பாஜகவில் இருக்கும் சிலரே இங்கே பரிதா பாபுவோடு சமரசம் ஆகிவிட்டனர். அதனால்தான் நான் கட்சியில் இருந்து வெளியே வந்துவிட்டேன்’ என்று டெல்லி வரை சென்று அந்த நபர் பல இன்புட்ஸுகளை டெல்லிக்குக் கொடுத்திருக்கிறார். இரு வாரங்களுக்கு முன்பு கூட டெல்லி சென்று வந்தார் அவர்.
ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவாக அனுசரனையாக இருக்கும் தொழிலதிபர்களின் பட்டியலை எடுத்து வைத்துக்கொண்டு மத்திய அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து திமுகவின் நிதியாதாரத்தை காலி செய்யும் ஆபரேஷனை செய்து வருகிறது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்த ஃபரிதா பாபு ரெய்டு என்கிறார்கள் வேலூர் வட்டாரத்தில். பற்றாக்குறைக்கு இவர் டெல்லி காங்கிரஸாருடனும் நல்ல தொடர்பில் இருப்பவர்.
ஃபரிதா பாபுவுடன் திமுக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா இல்லையா என்பதெல்லாம் வருமான வரித்துறையினரின் விசாரணையில் தெரியவரும். சிறு கனெக்ஷன் இருந்தால் கூட திமுகவின் தலைமை வரை இருக்கும் முக்கிய விக்கெட்டுகளை அமலாக்கத்துறை வளையத்துக்குள் கொண்டுவந்துவிடலாம் என்பதுதான் மத்திய அரசின் கணக்கு” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
போக்குவரத்து தொழிலாளர் ஊதிய உயர்வு: கலைஞர் கொடுத்ததை ஸ்டாலின் பறிக்கிறாரா?