தருமபுரம் ஆதீன மடத்துடன் தமிழ் நட்பு மட்டுமல்ல, எங்களுக்கு குடும்ப நட்பும் உண்டு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு முப்பெரும் விழா இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கல்லூரி பவளவிழா மலரையும், திருக்குறள் உரைவளம் நூலையும் வெளியிட்டு, தருமை இணையதள வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி ஒளிப்பதிவகத்தினையும் திறந்து வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”தருமை ஆதீன மடத்துடன் தமிழ் நட்பு மட்டுமல்ல, எங்களுக்கு குடும்ப நட்பும் உண்டு. தருமை ஆதீனத்துக்கு கட்டுப்பட்ட 27 கோவில்களில் ஒன்றுதான் தலைவர் கலைஞரின் திருக்குவளை ஆகும். அதனால்தான் எங்களுக்கும் இந்த தருமை ஆதினத்துக்கும் குடும்ப தொடர்பு உண்டு என்று நான் கொஞ்சம் கம்பீரமாக, உரிமையோடு சொன்னேன்.
நம்முடைய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு என்று பெயர் பெற்றிருந்தாலும், நாங்கள் எல்லாம் அவரை எப்போதும் செயல்பாபு, செயல்பாபு என்றுதான் பெருமையோடு அழைப்பதுண்டு. அந்த பெருமைக்குரிய சேகர்பாபு மூலமாக நான் நம்முடைய 27-ஆவது குருமகா சந்நிதானத்தை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறேன். பல்வேறு நிகழ்ச்சிகளில் நாங்கள் சந்தித்து இருக்கிறோம்.
அனைத்துத் துறையையும் சம விகிதத்தில் நாங்கள் வளர்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையை மிகமிக சிறப்பாக நிர்வகித்து வருகிறோம்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆலயங்களில் அன்னைத் தமிழ், 3000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு, அறநிலையத் துறை சார்பில் 10 கலைக் கல்லூரிகள், கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு, இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள பழமையான கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழா நடத்த உத்தரவு, திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு, தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை, பழமை மாறாமல் சீர்செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு, இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் என இந்து சமய அறநிலையத் துறையைக் காத்து வரும் ஆட்சி தான் திமுக ஆட்சி.
அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்று ஏங்கும் ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதனைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
தருமபுரம் ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் குருமகா சந்நிதானங்களும் தமிழ்நாட்டு மக்களும் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்கு போதுமானது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும், பண்பாட்டுக்கும் ஆபத்து வரும் போதெல்லாம் ஆன்மீகப் பெரியவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்கள்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழ் காக்கும் போராட்டம், சமூக சீர்திருத்த இயக்கம் உள்ளிட்ட அனைத்திலும் இனம் – மொழி – நாட்டு உரிமை காக்க ஆன்மீக ஆளுமைகள் தனது பங்களிப்பைக் கடந்த 100 ஆண்டுகளாகச் செலுத்தியதைப் போல இன்றைய ஆன்மீக ஆளுமைகளும் பங்களிக்க வேண்டும்.
தமிழ் மொழி காப்பாற்றப்பட வேண்டும். தமிழர்கள் காப்பாற்றப்பட்ட வேண்டும். தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும் இந்த மூன்றும் காப்பாற்றப்பட்டால்தான், இதுபோன்ற தமிழ் மடங்கள் எந்த நோக்கத்துக்காக 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும். இங்குள்ள மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், கல்வியில் மிக மிக உயரங்களை நீங்கள் அடைய வேண்டும்.
நேற்று சந்திரயான்-3 விண்கலம் நிலாவில் தரையிறங்கியிருப்பதன் மூலமாக, நமது இந்திய நாட்டை உலகமே வியப்போடு திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்தச் சாதனைக்கு பின்னால், சந்திரயான்-3 விண்கல பயணத்தின் திட்ட இயக்குநராக இருப்பவர், நமது தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல். அது மட்டுமல்ல, அரசுப் பள்ளி ஒன்றில் படித்து இன்று இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
அவர் போன்ற அறிவியலாளர்களை, கல்வியில் எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளில் நீங்கள் சாதனைகள் படைக்க வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கான உணர்வை அனைவரும் பெற வேண்டும்” என்று பேசியுள்ளார்.
மோனிஷா
டிஜிட்டல் திண்ணை: உதயநிதி கையில் எம்பி வேட்பாளர் பட்டியல்… அமைச்சர்கள் ஷாக்!
ஸ்டாலினை ’அண்ணன்’ என்று அழைத்த வீர முத்துவேலின் தந்தை: ஏன்?