உளவுத்துறை ஏடிஜிபி என்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை தலைமையிட ஏடிஜிபியாக நேற்று (ஜூன் 27) மாற்றப்பட்டார். மிக முக்கியமான பொறுப்பு அவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தலைமையிட ஏடிஜிபி பொறுப்பே கிடைத்தது.
இந்த நிலையில், இம்மாற்றத்துக்குக் காரணமாக வேறொரு பின்னணி பேசப்படுகிறது.
மதுரை கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்தபோது 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி பாஸ்போர்ட் ஆவணங்கள் வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை மதுரை க்யூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி வந்தார். கடந்த ஆண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சஸ்பெண்ட் செய்து இந்த வழக்கை சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் வாராகி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஜூன் 14 ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், ‘பத்திரிகையாளர் வாராகி என்பவர் ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் குறித்து 24-5-23 அன்று அனுப்பிய புகாரை உங்களுக்கு ஃபார்வேடு செய்கிறோம். இது தமிழக அரசு தொடர்புடைய விவகாரம் என்பதால் தமிழக அரசு இது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் தான் டேவிட்சன் தேவாசீர்வாதம் வலிமையான பதவியிலிருந்து மாற்றப்பட்டு காவல்துறை தலைமையிட ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.