அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அதிகாலை அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
அவருக்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்துவிட்டது.
இதனிடையே கடந்த அக்டோபர் 20ஆம் தேதி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் 9ஆவது முறையாக நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நீதிமன்ற காவலும் இன்றுடன் (நவம்பர் 6) முடிவடைந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலமாகச் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தபட்டார்.
அப்போது, அவரது நீதிமன்றக் காவலை நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுவது இது 10ஆவது முறையாகும்.
இந்த வழக்கு விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் அமலாக்கத்துறை வசம் உள்ள ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வரும் நவம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கேரளா குண்டு வெடிப்பு: மார்ட்டினுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் சூமோட்டோ செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி-பொன்முடிக்கு பின்னடைவு!