ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை ஓராண்டு காலத்தில் துரிதகதியில் நடைபெற்று முடிந்ததாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வி.அருண் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளர் மிலானி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்து, ‘ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது’ என்று தீர்ப்பளித்துள்ளது உயர் நீதிமன்றம்.
மேலும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்வதற்காக தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மிலானியின் தரப்பு வழக்கறிஞராக வாதாடிய தற்போதைய அரசு வழக்கறிஞர் வி.அருண் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விரிவாகப் பேசினார்.
“2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது அப்போதைய துணை முதல்வரின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட போது, தனது சொத்துக்கள் பற்றிய விவரங்களையும், தான் வாங்கிய கடன்கள் பற்றிய விவரங்களையும், கொடுக்க வேண்டிய கடன்கள் பற்றிய விவரங்களையும், நிறுவனங்களில் அவர் வைத்திருந்த பங்குகள் குறித்த விவரங்களையும் மறைத்து தேர்தல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

தேர்தல் ஆணைய அதிகாரி மனுவைப் பரிசீலனை செய்யும் போது திமுக தரப்பில் தங்க. தமிழ்செல்வன் அம்மனுவில் தவறுகள் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ரவீந்திரநாத்தின் செல்வாக்கிற்கு பயந்து தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு தேர்தல் நடந்து ரவீந்திரநாத் வெற்றி பெற்றுவிட்டார்.
ரவீந்திரநாத்தின் தேர்தல் மனுவை ஏற்றது முறையற்றது என்றும் இது தேர்தல் முடிவுகளை பாதித்துள்ளது என்றும் தேனியை சேர்ந்த வாக்காளர் மிலானி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அது கோவிட் தொற்று காலம் என்பதால் 3 ஆண்டு காலம் தேர்தல் வழக்கு நடைபெறவில்லை. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் பேரில் கடந்த ஓராண்டு காலமாக துரிதகதியில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று நிறைவுபெற்றது.
தொடர்ந்து மேலும் சில தகவல்கள் கோரப்பட்டு ஓ.பி.ரவீந்திரநாத் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று முடிந்தது.
இந்த விசாரணையில்… ஓ.பி.ரவீந்திரநாத் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் சொத்து விவரங்கள், வங்கியில் வாங்கிய கடன் பற்றிய விவரங்கள், நிறுவனங்களில் அவரது பங்குகள் பற்றிய விவரங்கள், அவருக்கு வர வேண்டிய கடன் விவரங்கள், அவருடைய வருமானம் குறித்த விவரங்களை மறைத்துள்ளார் என்பது நிரூபணம் செய்யப்பட்டதால் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்றும், தேனி மக்களவை தொகுதி காலியாக உள்ளது என்றும் உயர் நீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது.

இருந்தாலும் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடுக்கு செல்லவில்லை என்றால் தேனி மக்களவை தொகுதி காலியாக இருக்கும் என்பதால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருக்கும்” என்று வழக்கு விவரத்தை கூறினார் வழக்கறிஞர் அருண்.
மேலும், “வருகின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் நாற்பதும் நமதே என்று வெற்றி பெறுவதற்காக தமிழ்நாட்டு திமுக வழக்கறிஞர்கள் சார்பில் இந்த வெற்றியை திமுக தலைவரான முதல்வருக்கும், இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதிக்கும் சமர்ப்பிக்கிறோம்.
இதற்கு முன்னதாக 3 முறை இந்த வழக்கு விசாரணை நடைபெறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தை ஓ.பி.ரவீந்திரநாத் அணுகிய போது அவரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுத் தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெற்றது.
ஆனால் இதன் பிறகு ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்தால், அவருக்கு ஆதரவாக ஆணை கிடைக்குமா என்பது அவர் எடுக்கும் முயற்சியில் தான் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார் வழக்கறிஞர் அருண்.
தேர்தல் வழக்கு என்றாலே சம்பந்தப்பட்டவரின் பதவிக் காலம் முடிந்து பல ஆண்டுகள் கழித்துதான் தீர்ப்பு வரும் என்பது இதுவரையிலான நிலவரம். ஆனால் ஓ.பி.ரவீந்திரநாத் வழக்கில் அவரது எம்பி பதவிக் காலம் முடிவதற்கு சுமார் ஓராண்டு இருக்கும்போதே தீர்ப்பு வந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
மோனிஷா
செந்தில் பாலாஜியின் 2 வருடங்கள்: ஷாக் அடிக்கும் மின் வாரிய ஊழல்!
ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! தேனிக்கு இடைத் தேர்தலா?
Comments are closed.