மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களும் நிறைவடைந்த நிலையில், நேற்று (ஜூன் 1) மாலை இந்திய அளவில் பிரபல செய்தி நிறுவனங்கள் சார்பில் எக்சிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
ஏழு கட்டத் தேர்தல்களுக்குப் பின்னும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்படுவதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்த எக்சிட் போல் முடிவுகளில் பெரும்பாலும் மூன்றாவது முறையாக மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்றே கூறுகின்றன.
அதுவும் குறிப்பாக மேற்கு வங்காளம், ஒடிசா, பிகார் போன்ற மாநிலங்களில் பாஜக இந்த முறை அதிக இடங்களை வெல்லும் என்றும் எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களை பெறும் என்று பல எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கிறன.
இதுகுறித்து என்று இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் எக்சிட் போல் பற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது,
“இது எக்சிட் போல் முடிவுகள் அல்ல. மோடியின் முடிவுகள். மோடியின் மீடியாக்கள் வெளியிட்டுள்ள ஃபேண்டசி போல் இது” என்று கூறியுள்ளார். நேற்று கார்கே சொன்னதுபோல இந்தியா கூட்டணி 295 இடங்களைப் பெறும் என்று கூறியிருக்கிறார் ராகுல் காந்தி.
25 இடங்களில் பாஜகவுக்கு 33 இடங்களை வழங்கிய எக்சிட் போல்- கேஜ்ரிவால்
டெல்லியில் திகார் சிறையில் சரணடைய செல்வதற்கு முன் எக்சிட் போல் பற்றி நிருபர்களிடம் பேசிய ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்,
“நேற்று வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை என்று என்னால் கூறமுடியும். ஒரு கருத்துக்கணிப்பு ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 இடங்களில் பாஜகவுக்கு 33 இடங்களை வழங்கியது. பாஜகவுக்கு அதிக இடங்களை வழங்க யாரோ ஒருவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். 25 இடங்களில் 33 இடங்களை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, வாக்கு எண்ணிக்கைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அவர்கள் ஏன் போலியான கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்பதுதான் உண்மையான பிரச்சினை.
அவர்கள் இயந்திரங்களில் மோசடி செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இந்தியா கூட்டணிக் கட்சியினர் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களை முழு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்த விரும்புகிறேன். இறுதிச் சுற்றில் நாம் தோற்றாலும் அங்கிருந்து வெளியேறக்கூடாது.
பெரும்பாலும் தோல்வி முகம் என்று தெரிந்தால் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளில், முகவர்கள் விலகிச் செல்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியேறக்கூடாது, ரேண்டம் பூத்களின் EVM இயந்திரங்களில் VVPAT சீட்டுகளை சரிபார்க்க வேண்டும்” என்றார்.
மோடி விளையாடும் உளவியல் விளையாட்டு
எக்சிட் போல் குறித்து இன்று காங்கிரஸ் தலைமையகத்தில் பேசிய பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்.
“தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ‘போலியான மோசடியை நியாயப்படுத்தும் முயற்சி என்று காங்கிரஸ் கூறுகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகளை நியாயப்படுத்துவதற்காக வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது. இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளின் மன உறுதியை குலைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி விளையாடும் ‘உளவியல் விளையாட்டின்’ ஒரு பகுதிதான் இந்த எக்சிட் போல்.
‘நான் மீண்டும் வருகிறேன், மீண்டும் பிரதமராகப் போகிறேன்’ என்று அவர் அதிகாரத்துவத்திற்கு, நாட்டின் நிர்வாக அமைப்புக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகிறார், மேலும், நியாயமான வாக்குகளை எண்ணும் பொறுப்பை ஒப்படைக்கப்பட்ட அரசு ஊழியர்கள் இந்த அழுத்த தந்திரங்களுக்கு பயப்பட மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார்.
வாக்கு எண்ணிக்கையில் அழுத்தம்!
சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆதித்யா யாதவ், “வாக்கு எண்ணிக்கையில் அழுத்தம் கொடுக்க பாஜக முயற்சிக்கிறது. அதன் விளைவே இப்படி ஒரு எக்சிட் போல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து புரிவது என்னவென்றால், சரியான திட்டமிடலுடன், ஜூன், 4ல் நடக்கவுள்ள ஓட்டு எண்ணிக்கையை, பா.ஜ.க அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது. சமாஜ்வாதி கட்சி மற்றும் இந்திய கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் முகவர்களிடம் இந்த கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை இல்லை என்று கூறி கடுமையான கண்காணிப்பில் ஈடுபடக் கேட்டுள்ளோம்” என்றார்.
2021 இலும் இப்படித்தான் சொன்னார்கள்… -திரிணமூல் காங்கிரஸ்
எக்சிட் போல் முடிவுகளை நாங்கள் நிராகரிக்கிறோம், உண்மையான மக்களின் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதியன்று வரும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சாந்தனு சென் இதுகுறித்து கூறும்போது,
“பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று கணித்திருந்தன. ஆனால் உண்மையான முடிவுகள் என்னவென்று நாம் அனைவரும் அறிவோம். திரிணமூல் காங்கிரஸ் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது. அதேபோல இப்போதும் மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும்” என்று அக்கட்சியின் தலைவர் சாந்தனு சென் கூறினார்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
69% இடஒதுக்கீடு… சேகர் பாபு சொல்லிக்கொடுப்பதை பேசும் பிரகாஷ்ராஜ்: ஜெயக்குமார் தாக்கு!