கோவை எக்சிட் போல்: அண்ணாமலை என்ன ஆவார்?

Published On:

| By Aara

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின், எக்சிட் போல் முடிவுகளை மாநில வாரியாக வெளியிட்ட தேசிய ஊடகங்கள் சில தலைவர்களின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்றும் கணித்திருக்கின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை மக்களவைத் தொகுதி பற்றிய எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் பி.கணபதி ராஜ்குமார் வசதியான வாக்கு வித்தியாசத்தில்  வெற்றிபெறுவார் என இந்தியா டுடே -ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பின் தலைவர் பிரதீப் குப்தா இதுகுறித்து கூறும்போது, “மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான கோவையில் பாஜக தோல்வியை சந்திக்க நேரிடும். இங்கே திமுகவின் கணபதி ராஜ்குமாருக்கும் அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகளில்… திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 31.5% வாக்குகளையும், அடுத்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 31% வாக்குகளையும், பாஜக வேட்பாளர் அண்ணாமலை 30.5% வாக்குகளையும் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை தொகுதியில் மேற்குறிப்பிட்ட மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக அது கூறுகிறது.

இந்தியா டுடே கருத்துக் கணிப்பு பற்றி அந்த ஊடகத்திடம் பேசிய அண்ணாமலை, “கோவையில் நான் வெற்றி பெறுவேன். ஜூன் 4 அன்று உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்க விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

கலங்கரை விளக்கமாய் வழிகாட்டும் கலைஞர்: ஸ்டாலின் புகழ்மாலை!

திஹார் சிறையில் கெஜ்ரிவால் சரண்டர்: தொண்டர்களிடம் சொன்ன அந்த வார்த்தை!