நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்று சட்டசபையில் இன்று (ஜூன் 28) முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடைபெற்ற மருத்துவப்படிப்புகளுக்கான நீட் – இளங்கலை நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு, 67 மாணவர்களுக்கு முழு மதிப்பெண்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு, நாள்தோறும் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து தற்போது பல மாநில அரசுகளும், கல்வி ஆர்வலர்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் 3வது முறையாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பியுள்ள நிலையில், ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நீட் தேர்வு வந்த பிறகு கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாகிவிட்டது.நீட் தேர்வை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டின் நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு பிறகு நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரிய தனித் தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”பொய் பிரச்சாரத்தை பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்” : மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்!
உச்சத்தை தொட்ட தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?