துடிக்க துடிக்க மஸ்தான் கொலை – காருக்குள் நடந்தது என்ன?

Published On:

| By Kavi

முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.பி.மஸ்தான். திமுகவில் மாநில சிறுபான்மையினர் நலச் செயலாளராக இருந்தார்.

தனது மகனுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்த மஸ்தான் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். திருமண அழைப்பிதழ் வைப்பதற்காகக் கடந்த 21ஆம் தேதி இரவு திருச்சி புறப்பட்டார்.

அப்போது அவரது சகோதரர் மகன் இம்ரான் பாஷா மஸ்தானிடம், “நீங்கள் தனியாகப் போக வேண்டாம். நானும் உங்களுடன் வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

பின்னர், காரை இம்ரான் பாஷா இயக்க, மஸ்தான் அவருடன் கிளம்பினார். இரவு 9.30 மணிக்குச் சென்னையிலிருந்து கிளம்பிய நிலையில் நள்ளிரவில் இம்ரானிடம் இருந்து மஸ்தான் வீட்டுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய இம்ரான், “மஸ்தான் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்துவிட்டார்” என சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக கிளம்பி உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றனர்.

மகனுக்கு ஏற்பட்ட முதல் சந்தேகம்

உடலைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுது கொண்டிருக்க மருத்துவரான மஸ்தானின் மகன் யுரரிஸ் ஷாநவாஸ் அப்பாவின் உடலைப் பரிசோதனை செய்தார். அப்போது மஸ்தானின் முகத்தில் நகக்கீறல்கள் இருந்ததால் அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

உடனடியாக ஷாநவாஸ், “அப்பாவுக்கு என்ன நடந்தது” என இம்ரானிடம் கேட்க, “எனக்கு எதுவும் தெரியாது. காரில் சென்று கொண்டிருக்கும் போது வலிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக செங்கல்பட்டு அருகே இருக்கும் தீபம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்” என்று பதிலளித்துள்ளார்.

அவரது பதில் ஏற்கும்படி இல்லாததால், இம்ரான் மீது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஷாநவாஸ் புகார் அளித்தார்.

அதில், “தன்னுடைய சித்தப்பாவின் மருமகன் இம்ரான் பாஷாவுடன் Tn 06 AA 1112 என்ற பதிவெண் கொண்ட காரில் அப்பா சென்றார். அப்போது அப்பாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் செங்கல்பட்டு அருகில் உள்ள தீபம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறினார்.

மருத்துவர்கள் அப்பா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். அப்பாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. இம்ரானை விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

கொலை என உறுதி

இந்தப் புகாரைத் தொடர்ந்து தாம்பரம் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில், உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே மஸ்தானின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மஸ்தான் மூச்சுத் திணறி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

அதேசமயத்தில் இம்ரானிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது பதற்றத்துடன் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

ex mp masthan murder case what happened inside the car

திருவல்லிக்கேணி டூ செங்கல்பட்டு வரை

இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் இம்ரான் மற்றும் மஸ்தான் இருவரது செல்போன் சிக்னல் மற்றும் அழைப்புகளை ஆய்வு செய்தனர். இதில் தமீம் மற்றும் நஷீர் ஆகிய இருவருடன் பேசியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

அதோடு மஸ்தான் காரில் மேலும் இருவர் பயணித்தது செல்போன் சிக்னல் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். அதுபோன்று திருவல்லிக்கேணி முதல் செங்கல்பட்டு வரை 65 கிமீ தூரத்தில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் மஸ்தான் காரில் இருவர் ஏறியது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் யார் என விசாரித்தபோது இம்ரான் பாஷாவின் சித்தி மகன் தமீம் என்கிற சுல்தான் அகமது என்றும் அவரின் நண்பர் நஷீர் என்பதும் தெரியவந்தது.

அதுமட்டுமின்றி மஸ்தானின் காரை, மற்றொரு கார் பின் தொடர்ந்ததும் தெரியவந்தது.

இதுபோன்று கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், இம்ரான் தனது நண்பர்கள் தமீம், நசீர், தவுபிக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோருடன் சேர்ந்து மஸ்தானை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொலைக்கான திட்டம்

கைதான பிறகு இம்ரான் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், “நான் மருத்துவர். மஸ்தான் திமுகவிலிருந்ததாலும், அவர் மருத்துவமனை நடத்தி வந்ததாலும் எனக்கு ஏதாவது பதவி கிடைக்கும் என்று அவருடன் நெருங்கிப் பழகினேன்.

நான் நெருங்கிய உறவினர் என்பதால் என்னுடனும் அவர் நெருக்கமாகத்தான் இருந்தார்.
இதனைப் பயன்படுத்தி அவரிடம் தொடர்ந்து பணம் வாங்கி வந்தேன். இப்படியாக 15 லட்சம் ரூபாய் வரை வாங்கியிருந்தேன் . மஸ்தான் தனது மகனின் திருமணத்துக்காகக் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டார்.

பல கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் அவர் இந்த 15 லட்சத்தை வைத்துத்தான் மகனுக்குத் திருமணம் செய்ய வேண்டுமா? என கடன் வங்கியது குறித்து குரோம்பேட்டையைச் சேர்ந்த சித்தி மகன் தமீமிடம் கூறினேன்.

அதற்கு தமீம், “நீதானே மஸ்தானை அடிக்கடி காரில் அழைத்துச் செல்கிறாய். எனவே அவரை யாருக்குச் சந்தேகம் வராதபடி காரில் தனியாக அழைத்து வா கொலை செய்துவிடலாம்” என்று கூறினார்.

இதையடுத்து தமீம் மற்றும் கண்ணகி நகரைச் சேர்ந்த நசீர் என்பவருடன் சேர்ந்து கொலை செய்யத் திட்டமிட்டோம். இப்படித் திட்டமிட்டு கொலை செய்யக் காத்திருந்த நேரத்தில் தான் மஸ்தான் திருச்சி புறப்படுவது தெரியவந்து, நானும் உங்களுடன் வருகிறேன் என்று மஸ்தானிடம் அடம் பிடித்தேன்.

பின்தொடர்ந்த கார்

திருச்சி செல்லும் வழியில் செங்கல்பட்டு அருகே பைனான்சியர் ஒருவரிடம் பணம் வாங்க வேண்டும். உங்களுக்குத் தர வேண்டிய ரூ.15 லட்சத்தைக் கொடுத்துவிடுகிறேன் என்றேன்.

இரவு நேரத்தில் யார் பணம் தருவார்கள் என மஸ்தான் கேட்டார். பைனான்சியர்கள் எந்த நேரத்திலும் பணம் தருவார்கள் என அவரிடம் தெரிவித்தேன்.

இதையடுத்து இருவரும் காரில் புறப்பட்டோம். அதோடு ஏற்கனவே திட்டமிட்டபடி தமீம் மற்றும் நசீரை சானிடோரியம் அருகே நிற்கும்படி போன் செய்து கூறினேன்.
சானிடோரியத்தை அடைந்ததும் காரை நிறுத்தினேன். ஏன் இங்கு நிறுத்துகிறாய் என மஸ்தான் கேட்டார்.

பணம் வாங்கும் போது சாட்சி கையெழுத்துப் போட சித்தி மகன் தமீம் மற்றும் அவரது நண்பர் நஷீரை அழைத்துச் செல்லலாம் என்றேன். பணத்தைக் கையில் வாங்கியவுடன் இருவரும் திரும்பிச் சென்றுவிடுவார்கள் என்றார்.

அதன்படி சானிடோரியத்தில் இருவரையும் காரில் ஏற்றினேன். செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி தாண்டியதும் யாரும் இல்லாத இடத்தில் காரை நிறுத்தினேன்.

காருக்குள் துடிக்க துடிக்க போன உயிர்

அப்போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த நஷீர், மஸ்தானின் இரண்டு கைகளையும் பின்பக்கமாக இறுக்கமாக இழுத்துப் பிடித்துக்கொண்டார். இதையடுத்து ஒருவர் மஸ்தானின் காலை இறுக்கிப் பிடித்துக்கொள்ள, மற்றொருவர் வாய் மற்றும் மூக்கில் துணியை வைத்து அடைத்து மூச்சுத் திணறல் ஏற்படுத்தி கொலை செய்தோம்.

இதையடுத்து எங்களைப் பின்தொடர்ந்து வந்த தவுபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோரது காரில் ஏறி தமீமும், நஷீரும் சென்றுவிட்டனர். பின்னர் தான் மஸ்தான் வீட்டுக்கு தொடர்புகொண்டு அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

ex mp masthan murder case what happened inside the car

பிணவறை ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி

காருக்குள் இப்படி துடிக்க துடிக்க மஸ்தானின் உயிர் அடங்கியது குறித்து போலீசார் கூறுகையில், “9.30 மணிக்கு காரில் புறப்பட்ட நிலையில் 12 மணிக்குள் கொலையாளிகள் தாங்கள் திட்டமிட்டதை நடத்தி முடித்திருக்கின்றனர். இரண்டே மணி நேரத்தில் கொலை செய்திருக்கின்றனர்.

யாருக்கும் தெரியாமல் கொலை செய்வது எப்படி என்று இம்ரான் யூடியூபில் பல வீடியோக்களை பார்த்துள்ளார். இதுமட்டுமின்றி கொலையை மறைக்க ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையிலிருந்த ஊழியர்களுக்குப் பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்றிக் கொடுக்க இம்ரான் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் மஸ்தான் உறவினர்கள், முன்னாள் எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் உட்பட திமுகவினர் பலரும் மருத்துவமனையில் குவிந்ததால் இம்ரானால் லஞ்சம் கொடுக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

மஸ்தானைக் கொலை செய்ய இம்ரான் தனது நண்பர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முன்பணமாகக் கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரியா

மழை வெள்ள பாதிப்பு: அன்புமணி வேண்டுகோள்!

ரொனால்டோவை தட்டித் தூக்கிய சவுதி அரேபியா: எவ்வளவு கோடி தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share