முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மூன்று துறைகள் சோதனை!

Published On:

| By christopher

நாமக்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையுடன் இணைந்து வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 20) சோதனை செய்து வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஏற்கெனவே எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எஸ்பி.வேலுமணி, தங்கமணி, மற்றும் ஆர்.காமராஜ் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அந்த வரிசையில் தற்போது மீண்டும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி தங்க மணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். அவரது சொந்த மாவட்டமான நாமக்கல் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா என வெளிமாநிலங்களிலும், தமிழகத்தில் சென்னை, ஈரோடு போன்ற பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது. தங்கமணி 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த போது தமது பெயரிலும் தமது குடும்பத்தின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை கூறியது.

சோதனையின் முடிவில் கணக்கில் வராத 2.16 கோடி ரூபாய் பணம், 1.13 கிலோகிராம் தங்க நகைகள், சுமார் 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சான்று பொருட்களான கைபேசிகள் பல வங்கி பாதுகாப்பு பெட்டகங்களின் சாவிகள், கணினிகளின் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அவர் மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய மூன்று பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில், குறிப்பாக அவரது ஆடிட்டர் செந்தில்குமார் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரண்டாம் கட்டமாக அதே மாதம் 20ம் தேதி சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தங்கமணி இல்லத்தில் மீண்டும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தை நில அளவையிடும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறையுடன் இணைந்து வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான தொழிற்சாலைகளிலும் ஆய்வு நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் அவருக்கு சொந்தமான இடங்கள் எவ்வளவு பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது, அதன் மதிப்பு எவ்வளவு என்ற கோணத்திலும் சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment