முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை ஆவணங்களை திருத்தியுள்ளது என்று செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 14) வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த 8 மாதங்களாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை மூன்று முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், “மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமுறைவாக இருப்பதால் சாட்சியை கலைக்க வாய்ப்பு இருக்கிறது” என்று கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த நவம்பர் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்தது. தொடர்ந்து செந்தில் பாலாஜியின் உடலில் இருக்கும் பிரச்சனைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். மருத்துவ காரணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த ஜனவரி 30 ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “சாதாரண அரசு ஊழியர் கைது செய்யப்பட்டால் 48 மணி நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ஆனால், செந்தில் பாலாஜி கைதாகி 230 நாட்களுக்கு மேலாகியும் ஏன்? அமைச்சரவையில் நீடிக்கிறார்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவுக்கு ஆளுநரும் நேற்று (பிப்ரவரி 13) ஒப்புதல் அளித்தார்.
இந்த சூழலில் இன்று (பிப்ரவரி 14) காலை அமலாக்கத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை தாமதப்படுத்த நினைக்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு பதிலாக விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று மதியம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி, “செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட HP ஹார்ட் டிஸ்க் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதற்கு அமலாக்கத்துறையிடம் தகுந்த பதில் இல்லை. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அமைச்சராக இருப்பதால் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற அமலாக்கத்துறையின் வாதம் தற்போது செல்லாததாகிவிட்டது.
ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் தலைமறைவாக இருந்தால் அதனை காரணம் காட்டி அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொருவருக்கு ஜாமீன் மறுக்க கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனால் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் தலைமறைவாக இருப்பதை காரணம் காட்டி ஜாமீன் வழங்குவதை மறுக்க முடியாது” என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதனையடுத்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை ஒத்திவைத்தார்.
அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, நாளை(பிப்ரவரி 15) வாதங்களை முன்வைக்க உள்ளார்.
பிரியா, செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது : ED எதிர்ப்பு!
காதலர் தினத்தில் சரிந்த தங்கம்… பரிசளிக்க சரியான தருணம் இதுதான்!